19 மார்., 2012

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?



முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு.
அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும்.  உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும்.  இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.
இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ….
  • 1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?
·         நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.
  • 2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
·         குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.
  • 3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?
·         குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.
  • 4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
·         காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.
  • 5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?
·         நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.
  • 6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?
·         இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
  • 7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
·         தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.
  • 8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
·         சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்
  • நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
  • நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
  • தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
  • கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.
  • நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.
உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373
நன்றி: Green India Foundation

18 மார்., 2012

கடன் - எச்சரிக்கை




கடன் வாங்கும் முன்பும் பின்பும்!
கவனிக்க வேண்டியது...
 கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசரத் தேவைக்காக நாம் கடன் வாங்கும்போது பல விஷயங்களைப் பார்ப்பதே இல்லை. வங்கியிலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடன் பெறும்போது அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்வது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க கடன் வாங்கும்போதும், கடனை கட்டி முடித்த பிறகும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டோம். கடன் திரும்பச் செலுத்தியவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர்.

கடன் வாங்கும் முன்...!

''எந்த விதமான கடன் வாங்கப் போனாலும் சரி, அந்தக் கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு? திருப்பி செலுத்துவதற்கான காலம் எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால் அபராதம் உண்டா? இருக்கிறது என்றால் எத்தனை சதவிகிதம் என்பது போன்றவற்றை எழுதி வாங்கிக் கொள்வது அவசியம். கடன் கொடுக்கும் போது எழுதி வாங்கப்படும் கடனுறுதி சீட்டு எனப்படும் பிராமிசரி படிவத்தில் கடனுக்கான வட்டி, திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசோதித்த பிறகே கையெழுத்துப் போட வேண்டும்.

கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை வங்கியிடமிருந்து உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் வங்கியின் முத்திரையுடன் பெற்றுக் கொள்வது அவசியம். வங்கியில் பிராமிசரி படிவத்தை திருப்பித் தரமாட்டார்கள். ஆனால், அதன் மீது 'ரத்து செய்யப்பட்டுவிட்டது' என்று எழுதி வங்கி அதிகாரி கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடன் தொடர்பான ஆவணங்களையும், திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பிரச்னை என்றால் கையிலிருக்கும் ஆவணங்கள் நிச்சயம் உதவும்'' என்றவர், மேலும் கவனிக்க வேண்டிய சிலவற்றையும் அடுத்து விளக்கினார்.

கடன் வாங்கிய பிறகு...!

''வாகனக் கடன் வாங்கும்போது வங்கியின் பெயரில் ஆர்.சி. புக் இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்திய பின்பு உங்களது பெயருக்கு ஆர்.சி. புக்கை மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நீங்கள் வாங்கிய கடனை பதிவு செய்து இருப்பார்கள். கடனைத் திரும்பச் செலுத்தியதற்கான சான்றிதழை வங்கியில் இருந்து பெற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாகனத்தின் மீது இருக்கும் கடன் ரத்தாகும்.

மனை, வீட்டுப் பத்திரம் போன்ற அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை அடகு வைத்திருந்தால் கடனை முழுவதும் திரும்பச் செலுத்திய பிறகு ஆவணங்களைச் சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில், கடன் பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் வங்கிக்கு இனி அந்த சொத்து மீது எந்த உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate) வாங்கிக் கொள்வது அவசியம். மேலும், அடமானக் கடனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ரசீதை வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் அடமானத்தை ரத்துச் செய்யவேண்டும்.

நகையை அடகு வைக்கும்போது நகையின் எடையை மதிப்பிட்டு வாங்கும் வங்கிகள் நகையைத் திருப்பும்போது எடை போட்டுத் தருவதில்லை. நகையின் எடை குறைய வாய்ப்பிருப்பதால் நகையை திருப்பும் போதும் எடை போட்டு வாங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை. என்னென்ன நகைகளை அடகு வைத்திருக்கிறோம் என்பதை இரு தரப்பினரும் தெளிவாக எழுதி வைத்துக் கொள்வதும் நல்லது'' என்றார்.

மஞ்சள் கடுதாசி...
சிலர் ஆ..ஊ.. என்றால் மஞ்சள் கடுதாசி கொடுத்திருவேன் என்று மிரட்டல் தொனியில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் மஞ்சள் கடுதாசி கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள் என்னவென்று.

மஞ்சள் கடுதாசி என்ன சூழ்நிலைகளில் கொடுக்கப்படும்? அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மீள என்ன வழி? என்கிற கேள்விகளுக்கான பதில் முக்கியமானவை. பலருக்கும் தெரியாதவை.

கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை, கடன் காரணமாக ஊரைவிட்டு ஓடிவிடுவது, என்னால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என கடன்பட்டவருக்கு கடிதம் போடுவது போன்ற காரணங்களால் 'ஆக்ட் ஆஃப் இன்சால்வன்சி' சட்டத்தின்படி அவரை நீதிமன்றம் நொடிந்தவர் என்று அறிவிக்கும். நீதிமன்றம் அப்படி அறிவித்த அன்றையத் தேதி வரை அவருக்குள்ள கடன்களை, அவர் பெயரில் உள்ள எல்லா சொத்துகளையும் ஜப்தி செய்து, கடன் கொடுத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்.

அதன்பின் நீதிமன்றத்தில் தன்னை டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லி மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் மனு செய்ய வேண்டும். நீதிமன்றமானது, மஞ்சள் கடுதாசி கொடுத்தவரை அதிலிருந்து விடுவித்துவிட்டால் பிறகு அவர் புது வாழ்கையை ஆரம்பிக்கலாம்; புதிய தொழிலும் தொடங்கலாம். அவரை பழைய கடன் ஏதும் தொடராது. ஆனால் வங்கியிலோ, சமுதாயத்திலோ நொடிந்தவர் என நீதிமன்றம் அறிவித்தவருக்கு உரிய மரியாதை கிடைப்பது கஷ்டம். வங்கியில் கடன் கிடைப்பது போன்ற விஷயங்களில் சிக்கல் ஏற்படும். எனவே தேவைக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்படுவதை விட்டு கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி இது போன்ற சிக்கலில் மாட்டாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

17 மார்., 2012

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில



மழை நாளாக இருப்பதால், மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உள்ளது.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் இரண்டு உருளைக் கிழங்குகளைத் தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால், பொன்னிறமாக மிருதுவாக இருக்கும்.

* தரையைத் துடைக்கும்போது வாரத்தில் ஒருநாள், தண்ணீரில் உப்பு போட்டுத் துடைக்கவும். மற்றொரு நாள் மண்ணெண்ணெய் சில துளிகள் சேர்த்துத் துடைத்தால், தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

* குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கியவுடன், டெட்டால் கலந்த நீரில் அலசிய பிறகே, அணிவிக்க வேண்டும். ரேஷஸ், அரிப்பு போன்ற தொல்லைகள் வர வாய்ப்பிருப்பதால், அதை முன்கூட்டியே தவிர்க்கலாமே!

* முடி கொட்டுகிறதா? வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வர செழித்து வளரும்.

* விருந்தின்போது வெற்றிலைப் பாக்குத் தட்டில் இருக்கும் பாக்குப் பொட்டலங்களை, கையால் பிரிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். ஒரு சிறிய கத்திரிக்கோலை, அந்தத் தட்டில் வைத்தால் சௌகரியமாக இருக்கும்.

* மூலநோயால் அவதிப்படுகிறீர்களா? துத்தி இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள். நாற்பது நாள் தொடர்ந்து, காலையில் குடித்து வந் தால் மூலநோய் குண மாகும்.

* ஜாதகம், நியூமராலஜி எல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைப்போம். அந்தப் பெயரை சிதைக்காமல் முழுமையாக அழைத்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும்.

* உலர்ந்த பச்சைப் பட்டாணியை பவுடராக்கவும். ஒரு டீஸ்பூன் மாவில் பன்னீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் பூசவும். காய்ந்ததும் கழுவ, முகம் பளிச்சிடும்.

* சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி அரை கப் சாதத்தில் பிசைந்து சூட்டோடு சாப் பிடுங்கள். மலச்சிக்கல், மூலம் போன்றவைக் கட்டுப்படும்.

* ஏ.சி.வைத்திருப்பவர்கள் அவ்வப்போது தூசி படிதல், கேஸ் லீக் பிரச்னைகளைக் கவனித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பழுதாவ தோடு விபத்து ஏற்படவும் வாப்புண்டு.

* இரவு படுக்கப் போகும் முன்பு கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்களை, பசும்பாலுடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, குடிக்கவும். நல்ல சக்தி கிடைக்கும். சத்து அதிகமுள்ள பானம் இது.

* ஓமத்தை இலேசாக வறுத்து, அத்துடன் அரைப் பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து, கொட்டைப் பாக்களவு காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

* காலை எழுந்தவுடன் இருக்கும் சுறுசுறுப்பு மதியம் இருக்காது. எனவே, காலை எழுந்தவுடன் கடினமான வேலைகளை முடித்து விட்டால், இலகுவான வேலைகளை மதியத்துக்கு மேல் செயலாம்.

* சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றலை வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இதில் உள்ள அதிகப்படியான உப்பு, மண் உதிர்ந்துவிடும். எண் ணெயில் வறுக்கும்போது அதிக கசடும் வராது.

* ஃபேக்ஸ் மூலம் டாகுமெண்ட் வந்தால் அதனை உடனே நகல் எடுத்து வைக்க வேண்டும். ஃபேக்ஸ் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும்

16 மார்., 2012

ஹெல்த் ஸ்பெஷல் ! சூப்பர் டிப்ஸ்100.... எலும்பே நலமா?



ஹெல்த் ஸ்பெஷல் ! சூப்பர் டிப்ஸ்....
எலும்பே நலமா?

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

செல்லமே..செல்லமே!

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

மேனி எழில்!

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

சர்க்கரையை சமாளிப்போம்!

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

வாங்க பழகலாம்!

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

15 மார்., 2012

உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூப்பர் டிப்ஸ்'.



சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங்மால், மல்டிபிளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் என்று திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்ததுமே... 'ஹையா...' என்று குடும்பம் குடும்பமாக புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்போதெல்லாம் தினம் தினம் தீபாவளி என்றாகிவிட்டது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. என்றாலும், ''தீபாவளி சமயத்தில் நடக்கும் பர்ச்சேஸூக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. துணிகள் மட்டுமில்லை... செல்போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவற்றையும் தீபாவளி சமயத்தில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்குக் காரணம்... போனஸ் உள்ளிட்ட சமாசாரங்கள்தான்'' என்கிறார்கள் சென்னை, தி.நகர் பகுதியில் பிரபலமான ஷாப்பிங் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள்.

தீபாவளியோ... நியூ இயரோ... ஷாப்பிங் என்பது சந்தோஷமான சமாசாரம்தான். ஆனால், நம்முடைய தலையில் எப்படி எப்படியெல்லாம் மிளகாய் அரைப்பது என்பதில்தான் பலரும் குறியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்துவிடாமல் ஷாப்பிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது '100/100 சூப்பர் டிப்ஸ்'.

செல்போன் வாங்கப் போறீங்களா?

1. மொபைலை மாற்றும்போது 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.

2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்... உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.

3. மொபைல் வாங்கியதுமே.... சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்... பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.

4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். 'ஆகா... வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்' என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.

5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, 'இதுதான் எனக்குத் தேவையான போன்' என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.

6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!

7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..? அப்படியென்றால், 'அம்பாஸடர் மாதிரி' என்பார்களே... அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது 'பேஸிக் மாடல்' என்றுகூட சொல்லலாம். 'டச் ஸ்க்ரீன்' போன்ற 'ஃபேன்ஸி' மற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.

8. 'இரண்டு சிம்', 'குறைந்த விலை' என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

சிம் கார்டு ஜாக்கிரதை!

9. செல்போன் வைத்திருக்கிறீர்களா... சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ... அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

10. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.

11. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 'நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்...', 'நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்...' என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

12. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்... சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். 'அதெல்லாம் நமக்குத் தேவையா' என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

13. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்... உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.

ஆடைகளில் அலட்சியம் வேண்டாம்!

14. விழாக் காலம் என்றால்... கடைசிக் கட்டத்தில் ஆடைகள் வாங்கச் செல்லாதீர்கள். கூட்டம் அதிகமாக மொய்க்க ஆரம்பித்து, நின்று நிதானித்து தேர்வு செய்ய வசதியில்லாமல் செய்துவிடும். அதோடு, நல்ல துணிகளெல்லாம் விற்றும் தீர்ந்திருக்கும். அதேபோல மிகவும் ஆரம்பக் கட்டத்திலும் செல்லக் கூடாது. பழைய ஸ்டாக்குகளைத் தலையில் கட்டிவிடுவார்கள்.

15. 'என்ன வாங்க வேண்டும்?' என்று பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் நல்லது. ரெடிமேடு ஆடைகளென்றால் உடுத்திப் பாருங்கள்; எல்லா பட்டன்களையும் போட்டுப் பாருங்கள்; ஜிப்கள் சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பாருங்கள்; முக்கியமாக ஆடையை அணிந்து கொண்டு நடக்க முடிகிறதா, அமர முடிகிறதா, எழ முடிகிறதா என்பதையும் கவனியுங்கள். உதாரணத்துக்கு, இடுப்பு மிகவும் ¬ட்டான ஆடை என்றால்... அது அந்தப் பாகத்தில் புதுவித பிரச்னையை உண்டாக்கும்.

16. எளிதில் கழற்ற வசதியான ஆடைகளை அணிந்து கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். உடைகளைப் போட்டுப் பார்த்து வாங்க இது வசதியாக இருக்கும். இறுக்கமான ஆடைகள், ஷு போன்றவற்றைத் தவிருங்கள். போட்டுப் பார்க்கத் தடை செய்யும் கடைகளைத் தவிர்ப்பதே நல்லது.

17. ஆடைகளை நீங்களே தேடித் தேடி வாங்குவதை விட, உங்களுக்குத் தேவையான ஆடையை சேல்ஸ்மேனிடம் கேட்டு வாங்குவது ரொம்பவே நேரத்தை மிச்சப்படுத்தும். உங்கள் கவனத்தையும் அதிகமாக சிதைக்காது.

18. தனியே போய் ஷாப்பிங் செய்வதே நல்லது. நான்கைந்து தோழிகளுடன் போனால்... உங்களால் எதையும் நிம்மதியாக வாங்க முடியாது. யாராவதுகூட வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தால்... கணவருடன் செல்வதுதான் பயனுள்ளதாக இருக்கும் - குழந்தையை வைத்துக் கொள்வதில் ஆரம்பித்து பல விஷயங்களுக்கும்!

19. எவ்வளவு பட்ஜெட் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த பட்ஜெட்டுக்குரிய பொருள் கிடைக்கும் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள். கடைகளிலும் அதற்குரிய இடங்களைத் துழாவுங்கள்.

20 ஆடைகள் வாங்கும்போது... தண்ணீரில் அடிக்கடி நனைக்கக் கூடியதா, டிரை கிளீனிங் தேவைப்படுமா என்பதையெல்லாம் நன்றாகக் கேட்டுத் தெரிந்து வாங்குங்கள்.

21. நீங்கள் வாங்கிவந்த துணி சாயம் போகிறதா..? 'சரி நம்ம தலையெழுத்து' என்று விட்டுவிடாதீர்கள். வாங்கிய கடைக்கே திரும்ப எடுத்துச் சென்று புதிய துணியைக் கேட்டு வாங்குங்கள். அவர்களும் சத்தமில்லாமல் மாற்றித் தருவார்கள். அடுத்த தடவை சாயம் போனாலும், அதேபோல மாற்றிக் கேட்கத் தயங்காதீர்கள்.

உள்ளபடியே தள்ளுபடியா?
22. கடையில் நுழைந்தவுடன் முதலில் உங்கள் கண்களில் தெரிவது 'தள்ளுபடி' வாசகங்கள். அவசரப்பட்டு உங்கள் பணத்தை அங்கே கொட்டாதீர்கள். எதை முக்கியமாக வாங்க வேண்டுமோ... அதை முதலில் வாங்குங்கள். மீதமிருக்கும் பணத்துக்கு ஏற்ப 'தள்ளுபடி' பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்.

23. 'ஒரு துணி வாங்கும் பணத்தில், இரண்டு துணிகள்... மூன்று துணிகள்... நான்கு துணிகள்' என்று ஆசை காட்டினால் மயங்கி விழாதீர்கள். தேவைக்கேற்றதை மட்டும் வாங்குங்கள். தரமான பொருள், நீண்ட நாட்கள் மெருகுடன் இருக்கும்.

24. 'தள்ளுபடியில் வாங்கிய ஆடைகளை மாற்றித் தர இயலாது' என்றொரு வாசகத்தைக் கவனித்திருப்பீர்கள். அது, தரமற்ற பொருட்களை உங்களிடம் தள்ளி விடும் தந்திரமாகவும் இருக்கலாம். துணிகள் லேசாகக் கிழிந்திருந்தால்கூட, அதை மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி ஒரு பொருளை வாங்க வேண்டுமா... என்றும் முடிவு செய்யுங்கள்.

25. 'அசத்தலான 50% தள்ளுபடி' என்றவுடன் உற்சாகமாகி, 'பாவம், கடைக்காரர் நஷ்டத்தில் விற்கிறார்' என நினைத்து எல்லாவற்றையும் அள்ளி விடாதீர்கள். விற்பனை விலை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அடக்க விலை, சேர்க்கப்பட்ட விலை போன்ற இத்யாதி விலைகளெல்லாம் கடைக்காரருக்கே வெளிச்சம்.

புன்னகைக்கும் பொன் நகை!

இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் (Bureau of Indian Standards), 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கு வழங்கும் முத்திரைதான் '916 ஹால்மார்க்'. ஒரு கிராம் நகையில் 91.6% தூய தங்கம் இருக்கிறது என்பதைத்தான் குறிக்கிறது அந்த 916. தூய தங்கத்தின் அளவைப் பொறுத்து இந்த எண்கள் மாறுபடும் (9 கேரட்- 375; 14 கேரட்- 585; 17 கேரட்- 708; 18 கேரட்- 750; 21 கேரட்- 875; கேரட்- 23 கேரட்- 958). இதையெல்லாம் கவனித்து நகைகளை வாங்குவது நல்லது.

26. நீங்கள் வாங்கும் நகை, 'ஹால்மார்க்' முத்திரையுடன் இல்லையென்றால்... 'ஹால்மார்க்' முத்திரையைப் போட்டு தரச்சொல்லி வாங்கலாம். ஆனால், நகைகளை அதற்குரிய விற்பனை ரசீதுகளுடன் வாங்குவது முக்கியம்.

27. வாங்கும் நகையின் தரம் எதுவென்று முத்திரைக்கு உள்ளே இருக்கும் தர எண்ணை, லென்ஸ் மூலம் தெளிவாகப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

28. பெண் குழந்தை என்றால், எதிர்காலத்துக்குத் தேவை என்று நகைகளாக வாங்கிச் சேமிப்பீர்கள். அதைவிட, தங்க நாணயங்களாகச் சேமித்தால்... எதிர்காலத்தில், அன்றைய நாகரிகத்துக்கு ஏற்றாற்போல புதிய நகைகளைச் செய்து கொள்ளலாம்.

29. தங்க நகை விலை உயர்ந்து கொண்டே போகும் இந்தக் கால கட்டத்தில், உங்களின் முதலீடு, தங்க நகைகளாக இருக்கட்டும். அதுவும் '916 ஹால்மார்க்' நகைகளாக இருப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.

30. தங்க நகை வாங்கும்போது, தரமானதா என்பதைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். 'பவுனுக்கு இத்தனை ரூபாய் தள்ளுபடி' என்பதையெல்லாம் பார்த்து, தரமற்ற தங்க நகைகளை வாங்கிவிடாதீர்கள். விற்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

31. கல் வைத்த நகைகள் வாங்கும்போது, அந்தக் கற்களின் தரம் பற்றி நன்றாகக் கேட்டறியுங்கள். அவை தங்கத்தின் எடையுடன் சேருமா, சேராதா என்பதையும் கவனிப்பது முக்கியம். விலை குறைந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் நகையை, தங்கத்துக்குரிய விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனமல்ல.

சூப்பர் மார்க்கெட் போவோமா?!

32. தேவையில்லாமல் பணம் செலவாகும் ஒரு இடம்... சூப்பர் மார்க்கெட். என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டுப் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பீர்கள். அவையெல்லாம் வீட்டு அலமாரியிலும் ஃப்ரிட்ஜிலும் தூங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பொருள் கெட்டுப்போக ஆரம்பித்தால், உங்களின் நோக்கமே வீணாகிவிடும்.

33. 'பிராண்ட்' பார்த்து மயங்கிவிடாதீர்கள். அதே தரத்தில், உள்நாட்டுப் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக் கூடும். அதைக் கவனித்து வாங்குங்கள்.

34. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பொருட்களை கவனித்து வாங்குங்கள். விற்பவர்களின் வசீகர வார்த்தையில் மயங்கி வாங்கிக் குவிக்கும் வெஜிடபிள் கட்டர், சப்பாத்தி மேக்கர் எல்லாம் பெரும்பாலும் பயன்படுவதில்லை.

35. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு நல்லவையல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். அல்லது குறைவாகவே வாங்குங்கள்.

36. ஒரு கடைக்குச் செல்லும்போது, அந்தக் கடையின் சொந்தத் தயாரிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாம். நன்றாக இருந்தால், தொடரலாம். அந்தப் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாக இருக்கும் என்பதைக் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.

கம்ப்யூட்டர் வாங்க கவனம் தேவை!

37. கம்ப்யூட்டர் கொஞ்சம் கவனமாக வாங்க வேண்டிய விஷயம். ஒரே மாதிரி செயல் திறன் கொண்ட பல கம்ப்யூட்டர்களை பார்த்தபின் முடிவெடுக்க வேண்டும். எல்லா அப்டேஷன் சமாசாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மலிவு விலையில் 'ரேம்' போன்றவை கிடைத்தால், அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

38. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய முதல் அயிட்டம், ரேம். அதிக திறன் கொண்ட ரேம், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டை அதிகரிக்கும். கூடவே, ஆபரேடிங் சிஸ்டம் உங்கள் கம்ப்யூட்டரில் சக்திக்குத் தக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

39. உங்கள் தேவையை அந்த கம்ப்யூட்டர் பூர்த்தி செய்யாது எனத் தெரிந்தால்... அதை வாங்காதீர்கள். ஒரு கம்ப்யூட்டரை வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால்... கொஞ்ச நேரம் அதைத் தனியாகச் சோதித்துப் பாருங்கள். சேல்ஸ்மேன் அருகில் இருக்கும்போது சிலவற்றை சரியாகச் சோதிக்க முடியாமல் போகலாம்.

40. கம்ப்யூட்டருடன் என்னென்ன இணை பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் அனைத்தும் இல்லாவிட்டால், தைரியமாகக் கேட்டு வாங்குங்கள்.

41. கம்ப்யூட்டரின் வாரண்டி, கியாரண்டி, ரிட்டர்ன் போன்றவவை ரொம்ப முக்கியம். குறிப்பாக முக்கியமான பாகங்கள் பழுதானால் மாற்றித் தரும் கியாரண்டி அவசியம். அந்தக் கம்ப்யூட்டருக்கான சர்வீஸ் சென்டர்கள் உங்களுக்கு அருகில் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். எந்தெந்த நிறுவனங்கள், சிறப்பான சேவை தருகின்றன என்பதையும் விசாரித்து அறியுங்கள்.

42. இரண்டு பிராண்ட் கம்ப்யூட்டர்கள் ஒரேபோல இருந்தும், பயங்கர விலை வித்தியாசம் இருந்தால் நன்றாகக் கவனித்து வாங்கவும். புராஸசர், மெமரி, பிராண்ட் போன்றவை விலை வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அவையெல்லாம் திருப்தியாக இருக்கும்பட்சத்தில், விலை அதிகம் என்றாலும்கூட வாங்கலாம்.

43. பத்திரிகை விமர்சனங்கள், தயாரிப்பாளர் விமர்சனங்கள், பயன்பாட்டாளர் விமர்சனங்கள் மூன்றும் வேறு வேறு விதங்களில் கம்ப்யூட்டரை அலசும். எனவே, ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் இந்த மூன்று விதமான விமர்சனங்களையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

டிஜிட்டல் கேமரா டிஷ்யூம்!

44. கேமரா வாங்குவது ஒரு கலை. கேமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையா, வேலையா, பொழுதுபோக்கா, வீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும். சாதாரணத் தேவைக்கு எனில் 'ஆட்டோமேடிக்' கேமராவே போதும்.

45. டிஜிட்டல் கேமரா என்றதும், 'எத்தனை மெகா பிக்ஸல்?' என்பதுதான் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி. ஆனால், அது அவ்வளவு முக்கியமில்லை. நீங்கள் படங்களை 'சாதாரண' அளவில் பிரின்ட் போடப் போகிறீர்களெனில் 5 மெகா பிக்ஸல் கேமராக்களே கனகச்சிதம். மிகப் பெரிய 'புளோ-அப் சைஸ்' படங்களாக பிரின்ட் செய்ய வேண்டுமெனில் அதிக மெகா பிக்ஸல் கேமராக்கள் வாங்கலாம்.

46. பேட்டரி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிகம் 'இண்டோர்' போட்டோக்கள் எடுக்கும் கேமராவில் ஃப்ளாஷ் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு அதிக பேட்டரிகள் இருப்பது நல்லது. சார்ஜ் செய்து பயன்படுத்தக் கூடிய பேட்டரிகள் வாங்குவது அவசியம்.

47. கேமராவுடன் எல்லா உபபொருட்களும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கேமரா வாங்க முடிவு செய்தபின் அதன் விலை எங்கே குறைவாக இருக்கிறது, எங்கே இலவசமாக கவர், பேட்டரி, மெமரிகார்டு போன்றவை தருகிறார்கள் என்று பார்த்து வாங்குங்கள்.

48. சாதாரண தேவைகளுக்கு 'எஸ்.எல்.ஆர்.' ரக கேமரா வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் பயன்படுத்தக் கூடிய 'பாயின்ட் அண்ட் ஷுட்' கேமராக்களே அன்றாடத் தேவைகளுக்கு இலகுவானது.

49. கேமராவின் 'ஸும்' (zoom) வசதியைப் பார்க்கும்போது 'ஆப்டிகல் ஸும்' அதிகம் உள்ளதைப் பார்த்து வாங்க வேண்டும். டிஜிட்டல் ஸும் அதிகம் பயன் தராது.

50. அளவில் சிறியதாக... ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என்று கணக்குப் போட்டு கேமரா வாங்காதீர்கள். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கேமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

51. 'இமேஜ் ஸ்டெபிலைஸேஷன்' எனப்படும் வசதியுள்ள கேமராவா என்று பார்த்து வாங்குங்கள். அது இருந்தால்... போட்டோ எடுக்கும்போது கேமரா கொஞ்சம் அசைந்துவிட்டாலும், படம் தெளிவாக வரும்.

பாதுகாப்பான ஃபர்னிச்சர்!

52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்... நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.

53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.

55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.

56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்... கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.

57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.

58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.

ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்!

59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்... அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.

60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா... போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.

61 'ஃபில்ட்டர்'களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.

62 'எனர்ஜி சேவர்' என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். 'எனர்ஜி ஸ்டார்' அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.

63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல 'டைமர்' உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்... அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.

64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.

65. ஏ.சி. மெஷினுக்கு 'வருட சர்வீஸ்' வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.

66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, 'டர்போ ஆப்ஷன்' உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.

67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்... பெரும்பாலான பொருட்கள் 'சீஸன்' முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.

வாஷிங்மெஷின் - வெளுத்துக்கட்டுங்க!

68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.

69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.

70. 'எனர்ஜி சேவர்' ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.

71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் 'ஃபிரெண்ட் லோடிங்' மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்!

72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்... அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.

'ஆன்லைன்' ஷாப்பிங்!

விழாக்காலத் 'தள்ளுமுள்ளு'களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி 'ஆன்லைன் ஷாப்பிங்'. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்... அலைச்சலும் மிச்சம்.

73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.

74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது 'கிரெடிட் கார்ட்' ஹிஸ்டரியில் இருக்கும். 'பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!' என குழம்ப வேண்டியிருக்காது.

75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.

76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்... அதாவது, 'SSL - Secure Sockets Layer' என்றால்... பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

77. இணைய தளத்தில் 'ரிஜிஸ்டர்' செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.

விளையாட்டா எடுத்துக்காதீங்க!

78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.

80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்... மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.

81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.

82. 'குறைவான விலைக்குக் கிடைக்கிறதே' என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.

டெலிவிஷன்... பவர்விஷன்!

83. டி.வி. வாங்கப் போகிறீர்களா... என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.

86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.

87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.

88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.

உஷார்... உஷார்...

89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் 'பில்'லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.

90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.

91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், 'குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்' என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், 'குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்' என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.

92. பொருட்களை வாங்கும்போது 'கியாரண்டி கார்ட்' பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.

93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ''ஸாரி... ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க'' என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

94. 'இப்போது புதிய கைப்பிடியுடன்...', 'இப்போது புதிய ஸ்பீக்கருடன்...' இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்... பர்ஸூக்குத்தான் ஆபத்து.

95. 'பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு' என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்... நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!

96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!

97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.

98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்... நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!

99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.

100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்... அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

14 மார்., 2012

பழைய கார், பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸு இங்கே இருக்கிறது.




'முதலில் பழைய காரை வாங்கி ஓட்டிப் பழகுவோம்' என்று நினைப்பவர்கள் துவங்கி,

காருக்கான பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள் வரை வந்து சேருமிடம் யூஸ்டு கார் மார்க்கெட்.

யூஸ்டு காரை வாங்குவதற்கான வழிமுறை என்ன, யாரிடம் கார் வாங்குவது, இப்போது மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் 'டாப் 10' கார்களில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதை மாற்ற வேண்டியது இருக்கும் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்திருக்கிறோம். கூடுதலாக, பழைய பைக் வாங்குபவர்களுக்கான டிப்ஸும் இங்கே இருக்கிறது.

நிச்சயம் இந்த பக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்!

விலை வித்தியாசம்!

புத்தம் புதிய கார்களின் விற்பனை விலையைச் சார்ந்துதான் பழைய கார்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், புதிய கார்களை விற்பனை செய்யும் டீலர்களும் - கார் தயாரிப்பாளர்களும் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் தள்ளுபடிகள், பரிசுகள் என்று பல வகையான திட்டங்களைச் செயல்படுத்தி, கார்களின் விற்பனையைப் பெருக்க முயற்சிக்கிறார்கள். அதனால், புத்தம் புது கார்களின் விலையே ஊருக்கு ஊர் மாறுபடும். இந்தத் தாக்கத்தினால்தான், பழைய கார்களின் விலையும் ஊருக்கு ஊர் மாறுகிறது!

தயாரிப்பு நிறுத்தப்பட்ட கார்கள்!

தொழிற்சாலையையே மூடிவிட்ட நிறுவனங்கள் தயாரித்த கார்கள், மிக மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு மாடல் கார் மட்டும் நிறுத்தப்பட்டு, அது அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டு இருந்தால், அதன் விலை வீழ்ச்சியடையாது. குறைவாக விற்கப்பட்டு தயாரிப்பை நிறுத்தி இருந்தால், அதன் விலையும் குறைவாகத்தான் இருக்கும்.

கார் வாங்கும்போது..!

பழைய கார் வாங்கும்போது இரண்டு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒன்று, காரின் ஆர்.சி. புத்தகம், இன்ஷூரன்ஸ் பாலிஸி ஆகிய ஆவணங்கள். இன்னொன்று, காரின் உண்மையான கண்டிஷன். அதாவது, எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது? காரின் பாகங்கள் எப்படி இருக்கிறது என்பது மாதிரியான விஷயங்கள்.

நீங்கள் வாங்குகிற காரின் ஆர்.சி புத்தகம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். மறுபிரதியாக (டூப்ளிகேட்) இருக்கும்பட்சத்தில், ஒரிஜினல் எங்காவது அடமானத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் விழிப்பாக இருங்கள். காரில் உள்ள இன்ஜின், சேஸி எண்கள், கலர் ஆகியவற்றை ஆர்.சி புத்தகத்தில் இருக்கிற விபரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் ஒன்றாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள். கடனுதவி வாங்கிய 'எண்டார்ஸ்மென்ட்' ஆர்.சி புத்தகத்தில் இருந்தால், அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை அவசியம் சரிபார்க்க வேண்டும். காரின் சர்வீஸ் ரெக்கார்டுகளை ஆராய்ந்து பார்த்தால், காரை எப்படிப் பராமரித்து இருக்கிறார்கள் என்பதும் தெரிந்து விடும்.

பெரிய விபத்தில் சிக்கி சேதமடைந்த காரை, சரிசெய்து இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பானெட், கதவுகள், பின்புறக் கதவு (டிக்கி) ஆகியவற்றைத் திறந்து பேனல்கள் இணைக்கப்பட்டு இருக்கும் பகுதியை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். அவை ஒரிஜினல் அளவுக்கு மாற்றப்பட்டு இருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இதில் உள்ள ஒரிஜினல் பன்ச் மார்க்குகள் மாறி இருக்கும். இன்ஜினைப் பிரித்து சர்வீஸ் செய்திருந்தால், கேஸ்கட் ஒட்டப் பயன்படுத்திய பசை இருக்கும். இன்ஜினில் உள்ள ஸ்டட் பாக்ஸில் பன்ச் மார்க் இருக்காது. அதே போல், காரை இயக்கும்போது அதிகமாகக் கரும்புகை வந்தாலோ அல்லது வெண்மையாக புகை வந்தாலோ, இன்ஜினில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

காரின் வெளித்தோற்றம் பளபளவென புதிதாக இருந்தால், அது அதிகம் பயன்படுத்தாத புதிய கார் என நம்பிவிடாதீர்கள். ஏனென்றால், ஆயிரம் ரூபாய் செலவில் பாலீஷ் செய்து, பல ஆயிரங்கள் கூடுதலாக விற்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், எதிலாவது மோதியிருந்தால் அந்த இடத்தை 'டிங்கர்' வேலை செய்து பெயின்ட் தடவி இருப்பார்கள். நல்ல வெளிச்சத்தில் வெவ்வேறு கோணங்களில் பார்த்தால்தான் இந்த கலர் வித்தியாசம் தெரியும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால் வழவழப்பு வித்தியாசமாக இருக்கும்.

என்னதான் உண்மையைச் சாமர்த்தியமாக மறைத்து இருந்தாலும், விபத்தில் சிக்கிய காரைக் கண்டுபிடிக்க ஒரு எளிமையான இன்னொரு வழியும் இருக்கிறது. கார் விபத்துக்குள்ளாகி இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யப்பட்டு இருந்தால், அடுத்த ஆண்டு பாலிஸியில் கூடுதலான பிரீமியம் தொகை வசூலித்து இருப்பார்கள்.

அதேபோல், ஸ்பீடோ மீட்டரைத் திருத்தி குறைந்த அளவு கி.மீ ஓடியிருப்பதாகக் காட்டி விற்கும் முயற்சியும் இந்த வியாபாரத்தில் நடக்க சாத்தியம் உண்டு. இதை டயர்களின் தேய்மானம், இன்ஜின் பிக்-அப் ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், ஓடோ மீட்டரைத் திருத்தி இருந்தால், ஸ்பீடோ மீட்டரின் முள் பாதிக்கப்பட்டுவிடும். அதனால், கார் ஓடும்போது ஸ்பீடோ மீட்டர் முள் சீராக வேகத்தைக் காட்டாமல் முன்னும் பின்னுமாக அதிரும். கார், 10,000 கி.மீ மட்டுமே ஓடியதாகச் சிலர் பொய் சொல்லக்கூடும். ஆனால், காரின் டயர்களைப் பார்த்தால் பாதி தேய்ந்து இருக்கும். பழைய டயர்களைக் கழற்றிவிட்டு, புதிய டயர்களைப் பொருத்தியிருந்தால், அதையும் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். சர்வீஸ் புத்தகத்தில் இருக்கும் டயரின் வரிசை எண்ணும் தற்போது காரில் இருக்கும் டயரின் எண்ணும் ஒன்றுதானா எனச் சோதிப்பது சுலபம்தானே!

குறிப்பிட்ட ஒரு மாடல் கார், மார்க்கெட்டில் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் உதிரி பாகங்களின் விலையும் குறைவாகக் கிடைக்கும். இதனால், பராமரிப்புச் செலவும் குறைவாக இருக்கும். எண்ணிக்கையில் குறைவாக உள்ள காருக்கு அதிகமாக உதிரி பாகங்கள் தயாரிக்க மாட்டார்கள். ஆகவே, பராமரிப்புச் செலவு சற்றுக் கூடுதலாக இருக்கும்!

மாருதி ஆல்ட்டோ ஹூண்டாய் சான்ட்ரோ மாருதி எஸ்டீம் டாடா இண்டிகா மாருதி ஜென்
மாருதி ஸ்விஃப்ட் ஹோண்டா சிட்டி ஸ்கோடா ஆக்டேவியா டொயோட்டா இனோவா ஹூண்டாய் ஆக்ஸென்ட்

பழைய கார் மாதிரி பழைய பைக்குக்குப் பெரிய மார்க்கெட் கிடையாது. சொல்லப்போனால், பைக்குகளைப் பொறுத்தவரை புதிய பைக்குகளை வாங்கிவிடுவதே நல்லது. இருப்பினும், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு உட்பட்ட புது பைக் வாங்குவது நல்லது. அப்படி யூஸ்டு பைக் வாங்கும்போது நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ...

யூஸ்டு பைக் வாங்குபவர்கள் முதலில் பட்ஜெட்டை முடிவு செய்துவிட வேண்டும். கார்களுக்கு இருப்பது போன்று, பழைய பைக்குகளுக்கு எந்த வங்கியும் கடன் தருவது கிடையாது. அதே போல், பைக்குகள் வாங்குவதற்கென்று பிரத்யேக ஷோரூம்களும் இல்லை. தனியார் ஃபைனான்ஸுகளைத் தவிர இந்த பைக்குகளுக்குக் கடன் தருவார் யாரும் இல்லை. அதனால், முழுப் பணத்தையும் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்!

பட்ஜெட்டை இறுதி செய்த பிறகு என்ன பைக் வேண்டும் என் று முடிவு செய்யுங்கள். ஸ்கூட்டர், 125 சிசி, 150 சிசி என மார்க்கெட்டில் ஏகப்பட்ட பைக்குகள் உள்ளன. இதில் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகி வெற்றி பெற்ற மாடல்களை வாங்குவதே நல்லது. குறிப்பாக, தற்போதும் விற்பனையில் இருக்கும் பைக்குகளை வாங்கினால், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸுக்கு அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. கள்ளத்தனமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் பைக்குகளை வாங்காமல் ஒதுங்கிவிடுவதே நல்லது. காரணம், இதன் ஆவணங்கள் சரியாக இருக்காது.

பைக்கை முடிவு செய்த பிறகு கூடுமானவரை நண்பர்கள், தெரிந்தவர்களிடம் இருந்து பைக்கை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு பைக்குகளைப் பற்றி நல்ல பரிச்சயம் இல்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த மெக்கானிக்கை பைக் வாங்க உடன் அழைத்துச் செல்லுங்கள். வாங்கும் முன் பைக்கில் இருக்கும் இன்ஜின் நம்பரும், சேஸி நம்பரும் ஆர்.சி புத்தகத்தில் இருக்கும் விபரங்களுடன் இணைந்து போகிறதா என்று கவனியுங்கள்.

பைக்கை விற்பனை செய்பவர் அரிச்சந்திரன் மாதிரி, பைக் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால், விபத்துக்குள்ளான பைக்கா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க சில யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஸ்க்ராட்ச் ஆன ஹெட் லைட், கண்ணாடி, ஹேண்டில் பார் முனை, வளைந்து போயிருக்கும் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர், திருகிப் போயிருக்கும் பிரேக் மற்றும் கியர் பெடல்களைப் பார்த்தாலே இது விபத்துக்குள்ளான பைக் என்று புரிந்துகொள்ளுங்கள். அதேபோல், பெட்ரோல் டேங்க்கை நன்றாகத் தடவிப் பாருங்கள். சமமாக இல்லாமல் இருந்தால், அடிப்பட்டு வேலை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பைக்குகளின் விலையை நன்றாகக் குறைத்துப் பேசுங்கள்.

பைக்கின் சென்டர் ஸ்டாண்டைப் போட்டு, ஹேண்டில் பாரை நேராக வைத்துவிட்டு தூரமாகப் போய் பைக்கைப் பின்பக்கத்தில் இருந்து பாருங்கள். பைக்கைப் பின்னால் இருந்து பார்க்கும்போது, முன் மற்றும் பின்பக்க வீல்கள் ஒரே நேர்க்கோட்டில் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள்.

இன்ஜினில் ஆயில் கசிவு இருக்கிறதா, கேஸ்கட் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இன்ஜினில் வேலை என்றால் செலவு அதிகமாகும்.

சஸ்பென்ஷன் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு, பைக்கின் 'ஃபுட் ரெஸ்ட்டில்' ஏறி நின்றுகொண்டு மற்றொருவர் பைக்கை பிடித்துக்கொள்ள, நீங்கள் ஹேண்டில் பாரில் கைவைத்து பைக்கை வேகமாக ஒரு அழுத்து அழுத்துங்கள். சஸ்பென்ஷன் ஸ்மூத்தாக அழுந்தி மீண்டும் நிமிர்கிறதா என்பது இதில் தெரிந்துவிடும்.

பெரிய டயர், கலர் கலரான ஏர் ஃபில்டர், டர் புர் சத்தம் போடும் சைலன்ஸர் பொருத்தப்பட்ட பைக்குகளுக்காக அதிக காசு கொடுக்காதீர்கள். பெரிய சைஸ் டயர்கள் மைலேஜை உறிஞ்சிவிடும். சஸ்பென்ஷன் மற்றும் ஸ்ப்ராக்கெட்டையும் இவை கெடுத்து விடும்.

ஸ்போக் வீல் கொண்ட பைக்குகளில் வீல் ரிம்கள் ஏதும் வளைந்து இருக்கிறதா என்று பாருங்கள். அலாய் வீல் மாற்றுவதற்கு அதிகம் செலவாகும். அதனால், அலாய் வீல்களில் ஏதும் விரிசல் இருக்கிறதா என்று முழுமையாகச் சோதித்துப் பாருங்கள்.

பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். முதலில் பைக் சாவி ஒரிஜினலா என்று பார்ப்பது அவசியம். செல்ஃப் ஸ்டார்ட் பைக்குகளில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பட்டன் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். அப்படி வேலை செய்யாத பட்சத்தில் பேட்டரியை மாற்றித் தரச் சொல்லுங்கள். அல்லது பேட்டரிக்கான முழு காசையும் பைக்கின் விலையில் குறைத்துக்கொள்ளுங்கள். பேட்டரியால் பிரச்னை இல்லையென்றால், ஸ்டார்ட்டர் மோட்டாரில் பிரச்னை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் சரி பாருங்கள்.

லைட், ஹாரன், இண்டிகேட்டர்கள், ஸ்பீடோ, ஓடோ, டிரிப் மீட்டர்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.

இதுதான் உங்கள் பைக் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, பைக்கை அந்த பைக் தயாரிப்பாளரின் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுபோய் என்னென்ன பாகங்கள் மாற்ற வேண்டியது இருக்கும். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். காரணம், இந்தத் தொகையை அடிப்படையாக வைத்து நீங்கள் பைக்கின் விலையை மேலும் குறைக்க முடியும்.

என்னென்ன வேண்டும்?

1. ஃபார்ம் 28: பைக்கை வாங்குபவர், விற்பவரின் ஆர்டிஓ வட்டாரத்தில் இருந்து வெளியிடத்தில் இருக்கிறார் என்றால், ஃபார்ம் 28-ஐ வாங்கி பைக்கை ரீ-ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

2. ஃபார்ம்-29: இதில், பைக்கை விற்பவர், 'இந்த பைக்கை நான் விற்றுவிட்டேன்' என்று கையெழுத்திட வேண்டும்.

3. ஃபார்ம்-30: இதில் பைக்கை வாங்குபவர் - விற்பவர் இருவருமே பைக் வாங்கியதையும், விற்றதையும் உறுதி செய்து கையெழுத்திட வேண்டும்.

4. புதிய ஆர்சி புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யுங்கள் (இப்போது ஸ்மார்ட் கார்டு வசதிகூட இருக்கிறது).

5. பைக் இன்ஷ¨ரன்ஸை உங்கள் பெயருக்கு மாற்றுங்கள்.

6. வாகன வரி செலுத்தியதற்கான ரசீதை, விற்பனை செய்பவரிடம் இருந்து மறக்காமல் வாங்குங்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons