12 நவ., 2010

மர்பி விதிகள் 1-20


மர்பி விதிகள்

மர்பி விதிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகம் பிரபலமான எதிர்மறை விதிகள் இதுவே எனலாம்.

அவற்றுள் சில சிந்திக்கவும் வைக்கும்!

என்னால் முடிந்த மட்டும் தமிழ் படுத்தியிருக்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள்.

1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்.

2. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்!

3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

4. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர் பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்.

5. எந்த விஷயமும் மாறாத பட்சத்தில் நிகழ்வுகள் எப்போதுமே மோசமான கட்டத்திலிருந்து மிக மோசமான கட்டங்களுக்கே செல்லும்.

6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.

8. புன்னகை புரியுங்கள். நாளை இதை விட மோசமாகத் தான் இருக்கும்.

9. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.

10. உடைபடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

11. எந்த ஒரு விஷயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.

12. எந்த ஒரு விஷயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.

13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.

14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!

15. வெண்ணெய் தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்தப் பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது!

16. கிழே விழும் ஒரு பொருள் எந்த இடத்தில் விழுந்தால் அதிக நட்டத்தைக் கொடுக்குமோ அந்த இடத்தில் தான் விழும்.

17. எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடனேயே கிடைத்து விடும்.

18. நீங்கள் தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும்.

19. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். (அது உங்கள் மனைவியின் கண்களில் தான் முதலில் படும்!)

20. நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசை தான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.

மர்பி விதிகளின் வரலாறு காண்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக :) ஏற்படுத்தப்பட்டது.

அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.

ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகார், ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons