13 நவ., 2010

மர்பி விதிகள் 1601-1650


1601. பின் பக்கம் 4 சக்கரங்கள் இருக்கும் சரக்கு வண்டியின் உட்புற சக்கரம் தான் அடிக்கடி பழுதாகும்.

1602. நீங்கள் ஒரு வரிசையில் எவ்வளவு நேரம் அதிகமாகக் காத்திருக்கின்றீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் தவறான வரிசையில் நிற்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாகின்றது.

1603. அரசு எடுத்துக் கொள்ளும் திட்டங்களின் தொகை அதிகமாக அதிகமாக பாராளுமன்றத்தில் அதைப் பற்றிய கேள்விகள் மிகக் குறைவாகவே எழுப்பப்படும்.

1604. எந்த ஒரு நிர்வாகத்திலும், மேலதிகாரிகள் கீழதிகாரிகளை நிர்வகிப்பதை விட, கீழதிகாரிகள் மேலதிகாரிகளை நிர்வகிப்பது தான் அதிகம் நடக்கும்.

1605. எந்த ஒரு பணியையும் நேரத்தில் முடிப்பதற்குப் பணம் கிடைப்பதில்லை. அதே பணியைக் காலம் கடந்து செய்வதற்கு அதை விட அதிகப் பணம் தேவைப்படும் போது பணம் கிடைத்து விடும்.

1606. ஒரு முட்டாள் வேலைக்காரனுக்கும் திருடனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், திருடன் சரியாகப் பூட்டு எங்கே இருக்கின்றது என்று தெரிந்து வைத்து உடைப்பான். முட்டாள் வேலைக்காரனோ எதையுமே தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றையுமே உடைப்பான். 

1607. வேலை என்பது கள்ளிச் செடி. பணம் தான் அதைப் பசுமையாய் வைத்திருக்கின்றது.

1608. சோம்பேறித்தனம் தான் பத்துக்கு ஒன்பது கண்டுபிடிப்புக்களின் காரணமாகும்.

1609. பஞ்சாமிர்தம் விரும்புவர்களும், சட்டத்தை விரும்புவர்களும் அதைத் தயாரிக்கும் போது பார்க்காமல் இருப்பது நல்லது.

1610. விளம்பரத்தின் எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் எப்போதுமே ஆகாது.
1611. மனிதர்கள் சமமாகவே பிறக்கின்றார்கள். சமமாகவே புதைக்கப்படுகின்றார்கள்.

1612. கட்டப்படும் ஒரு கட்டிடத்தில் தேவைப்படும் மாற்றங்கள் கட்டி முடித்த பின்னரே தெரிய வரும்.

1613. உங்கள் முன் மிகச் சரியெனத் தோன்றும் ஒரு வழியும், மிகத் தவறெனத் தோன்றும் ஒரு வழியும் குறுக்கிட்டால், மிகத் தவறெனத் தோன்றும் வழியையே தேர்ந்தெடுங்கள். ஏனென்றால், தவறினால், உங்களுக்குச் சரியான பாதையைக் கண்டறியும் ஒரு வாய்ப்பாவது அப்போது கிடைக்குமே!

1614. ஒரு விஷயத்தில் மாற்றம் செய்து கொண்டே போவதை விட, ஒரு புதிய விஷயத்தை முதலிலிருந்து ஆரம்பிப்பதே உத்தமம்.

1615. ஒரு நாட்டின் ராணுவ உயரதிகாரியின் உடை விறைப்புக்கும், அந்த நாட்டில் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுக்கும் அதிகத் தொடர்புண்டு.

1616. பந்தயத்தில் முதலில் ஓடும் குதிரையும், போரில் பலம் அதிகம் உள்ளவரும் ஜெயிப்பதில்லை.

1617. திறமையான விற்பனைப் பிரதிநிதியும், திறமையாகப் பழுது பார்ப்பவரும் பசியில் இருந்ததாகச் சரித்திரம் கிடையாது.

1618. எந்த ஒரு விதியையும் தகுந்த படி யூகிக்கும் வளமிருந்தால் எந்த ஒரு முடிவுக்குள்ளும் அடக்க முடியும். 

1619. எது தவறாக நடந்தாலும் சரி, பார்ப்பதற்குச் சரியாக நடப்பது போலவே தான் இருக்கும்.

1620. தவறாக நடப்பவை எல்லாம் தவறானவையே! ஆனால் சரியாக நடப்பவை எல்லாம் சரியானவை அல்ல!
1621. இதுவரை காத்திருந்தாயிற்று. இன்னும் காத்திருங்கள்.

1622. திருப்தி என்பது கானல் நீர். அதை அடைய நடப்பதே முன்னேற்றம்.

1623. ஒரு வாடிக்கையாளருக்கென்று தரப்படும் சிறப்புச் சலுகை அவரை இழப்பதற்கான முதல் படி.

1624. யார் எடுத்த வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றார்களோ அவர்களே சிறந்தவர்கள். இது பேச்சாளருக்கும் பொருந்தும்.

1625. ஒரு பொருள் தொலைந்து போவதன் காரணம், அதன் தேவையை ஞாபகப்படுத்தவே!

1626. மிகக் குறைந்த அளவு அறியாமை நெடுங்கால வாழ்க்கைக்குப் போதுமானதாகும்.

1627. தோல்வி எப்படி ஏற்படுகின்றது என்று எளிதில் கண்டறியமுடியும். வெற்றி எப்படி ஏற்படுகின்றது என்று கண்டறிவது தான் கடினமானதாகும்.

1628. ஏமாற்றுவதாய் இருந்தாலும், வஞ்சகமின்றி ஏமாற்ற வேண்டும்.

1629. உண்மையான உண்மையென்று ஒன்று இல்லை என்பதே உண்மையான உண்மை.

1630. இயற்கையின் விதிகளை நாம் கண்டறிவதால் அதற்கு உடன்படக்கூடாது என்பது பொருளில்லை.
1631. பருக்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள், மலைகளை அவைகளே கவனித்துக் கொள்ளும்.

1632. எப்போதாவது காட்டப்படும் திறமையைக் காட்டிலும் எப்போதும் காட்டப்படும் உழைப்பு மேலானது.

1633. புகைப்படக்கருவியில் தெளிவாக எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் யாவும் தேவையில்லாதவையாகவே இருக்கும்.

1634. தேவைப்படாது என்று நீங்கள் தூக்கியெறிந்த பொருள் நிச்சயம் மற்ற எல்லோருக்கும் உதவுவதாகவே இருக்கும்.

1635. தேவைப்படாது என்று மற்றவர்கள் தூக்கியெறிந்த பொருள் நிச்சயம் நமக்கும் உதவாததாகவே இருக்கும்.

1636. கணினி 99% வேலை முடியும் போது தான் பழுதாகி நின்று விடும்.

1637. அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் தோன்றுவதும், சோகமாக இருப்பதைப் போல் தோன்றுவதும், உண்மை அல்ல. 

1638. பூட்டில்லாச் சாவியும், சாவியில்லாப் பூட்டும் வீண். திட்டமில்லாப் பணமும், பணமில்லாத் திட்டமும் வீண்.

1639. வீட்டிற்குச் சுவர் எப்படி முக்கியமோ, அப்படி நிர்வாகத்துக்குப் பிரச்னைகள்.

1640. ஒரு பொருள் தேவையில்லாதவரை நம்மிடம் இருக்கும்
1641. நீங்கள் புதிய சிகரெட்டைப் பற்ற வைத்ததும் தான் நீங்கள் மரியாதை வைத்திருப்பவர் உங்கள் முன் வந்து நிற்பார்.

1642. இயற்கை உபாதையை அடக்க முடியாமல் பொதுகழிப்பிடத்திற்குச் செல்லும் போது தான் அங்கே நீங்கள் அதிகநேரம் காத்திருக்க நேரிடும்.

1643. உங்கள் அதிகபட்ச எரிச்சலைக் காட்ட இது நேரமல்ல. ஏனெனில், இப்போது தான் பிரச்னையே ஆரம்பித்திருக்கின்றது.

1644. ஒரு மருத்துவர் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொள்ள இயலும். ஒரு வழக்கறிஞர் தன் வழக்குக்குத் தானே வாதிட இயலும். ஆனால், ஒரு முட்டாளால் தனக்குத் தானே புத்திமதி சொல்ல இயலாது.

1645. இருக்கையில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளும், புத்தம் புது ஆடைகளும் எப்போதும் ஈர்ப்பு விசை கொண்டவைகளாக இருக்கும்.

1646. சேமிப்பின் அவசியத்தையும், செலவளிப்பதன் அநாவசியத்தையும் அதைச் செய்யும் போது உணர முடியாது.

1647. நீங்கள் திரும்ப வேண்டிய பாதையைத் தாண்டிய பின்னர் தான் பாதையை விசாரிக்க ஆரம்பிப்பீர்கள்.

1648. ஒரு கூட்டத்தில் பேசுபவர் அல்லது கவனிப்பவர்கள் இரு தரப்பில் ஏதேனும் ஒரு தரப்பின‌ரே ஆர்வ‌மாக இருப்பார்கள்.

1649. நேற்று சரியாக நடந்தது இன்று தவறாக நடப்பதைப் போல, இன்று தவறாக நடப்பது நாளை சரியாக நடந்து விடக்கூடும் என்று எதிர்பார்க்க இயலாது.

1650. ஒரு கருவி இயங்கும் பொழுதைக் காட்டிலும் இயங்காத பொழுது அதிகமாகத் தேயும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons