1 டிச., 2011

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்



 (கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர்)
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல் குர்ஆன் 30:21)
இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.

வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச்
செய்கின்றனர்.

வரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு
திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள்,வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)
நிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்
நிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

சனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது  இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (4826)
மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்? நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா? அல்லது கெட்டதாக அமையுமா? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:
"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 27:65)
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 6:59)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் (9171)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா
நூல்: முஸ்லிம் (4137)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர்  (பீடை) என்பதும் கிடையாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (5757)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)
நூல்: அபூதாவூத் (3411)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)
நூல்: அஹ்மத் (6748)
மார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

பந்தலிலும் ஓர் பாவ காரியம்
பிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.
(அல்குர்ஆன் 42:49,50)
இப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

மாலையில் மறைந்துள்ள மர்மம்
மணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்

மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.
அதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.

நிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ

இறைவன் கூறுவதைப் பாருங்கள்
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக
(அல்குர்ஆன் 9:51)
இந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.

தாலி கட்டுதல்
தாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி
கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே!

இந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.
நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)
நூல்: அஹ்மத் (16781)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.
அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)
நூல்: அஹ்மத் (16763)
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (19149)
எனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரத்தி எடுத்தல்
பிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.
ஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.

நிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது.  ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 6:63,64)

தாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்
சில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ,சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!  
(அல்குர்ஆன் 41:37)

இவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

மூட நம்பிக்கைகள்
நி     ஆயிசு நூறு
நி     காக்கை கத்தினால் தபால் வரும்
நி     மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்
நி     கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
நி     சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்
நி     வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.
நி     குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது
நி     வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது
நி     பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்
நி     விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்
நி     திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது
நி     ஆரத்தி எடுப்பது
நி     திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது
நி     தாயத்து, தாவீஸ் அணிவது
நி     தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது
நி  வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை            மாட்டுவது
நி     பூசணிக்காயைத் தொங்க விடுவது
நி     பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது
நி     வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது
நி     மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது
நி     கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்
நி     தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்
நி     உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை
நி     தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்
நி     திருமணத்தில் மாலை மாட்டுதல்
நி     மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்
நி     மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்


Indeed in theMessenger of Allah you have an excellent example to follow for who ever hopes in Allah and the Last Day and remembers Allah much. 
Al Quran (33:21)

இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று  ஓர் ஆத்மா  மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக  பரிகாரமாக எந்த  நஷ்ட  ஈடும் பெறப்படாது.  யாருடைய  பரிந்துரையும்  அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
அல் குர்ஆன் (02-123

But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
  
 Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? 
Al Quran (47:24)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons