எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அபூ ரிஸ்வான்
இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோரும் வாங்கிச் செல்கிறார்கள்.
இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள்.
‘Shopaholic’ என்னும் சொல் ‘alcoholic’ என்ற ஆங்கில சொல்லின் பொருள்படும் ‘நிறுத்தாத குடிகாரன்’ மற்றும் ‘workaholic’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் கொண்ட ‘இடைவிடாது பணிசெய்து கொண்டிருப்பவன்’ என்பது போன்றவையே! இப்படிப்பட்ட மனக்கட்டுப்பாடற்ற நிலை மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோமானால் அதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும்.
முதலாவது காரணம்: மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள். உலக மக்கள் பலமதங்களை பின்பற்றுபவர்களாக இருந்தும் இறைநம்பிக்கையும், மறுமைப்பற்றிய சிந்தனையும், இவ்வுலக வாழ்வு மிகக்குறுகிய, நிலையற்ற வாழ்வு என்னும் உண்ணமையும் மனதில் ஆழப்பதியாததே! அதிலும் இளைஞர்களின் எண்ணங்கள் இன்னும் விபரீதமாய் இருக்கின்றன. “வாழ்க்கை வாழ்வது ஒருமுறையே; அதனால் அவ்வாழ்க்கையில் எல்லாவிதமான இன்பங்களையும், சாதனங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும்” என்பது தான்.
இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுக்கு தேவையான பொருட்களை மற்றுமின்றி தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் தான் இப்படி ‘ஷாப்பஹாலிக்காக’ (shopaholic) இருக்கிறார்களா என்றால் அவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வசதியுடையவர்களும் (middle class) இப்படிப்பட்ட மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பு எடுக்கப்ட்ட புள்ளிவிபரப்படி, 10 ஷாப்பஹாலிக்குகளில் 9 பேர் பெண்களாகவும் ஒருவர் ஆணாகவும் இருந்தார். தற்பொழுது ஆண்களிலும் இம்மனோநிலை கொண்டவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
இரண்டாவது காரணம்: பெருமையடிப்பது. மற்றவர்களிடம் இல்லாத புதுப்புதுவகையான பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தனது தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். கடைகளில் ஏதாவது புதிய மாடல் நகை விற்பனைக்கு வந்திருந்தால், பழைய நகைகளை விற்றுவிற்று அப்புதிய மாடல் நகையை உடனே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். பெருமையோடு தம் உறவினர்களிடமும், தோழிகளிடமும் காட்டுகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு முறையும் நகைகளை மாற்றும்பொழுது எந்த அளவுக்கு பணம் வீணாக செலவாகிறது என்பதை இப்பெண்கள் உணர்வதில்லை. இம்மனநிலையை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் இது ஒருவகையான ‘நாகரீகத்தின் மேல்படியில் நிற்பவர்கள் நான்தான் என்று காட்டும் மனநிலை’ என வர்ணிக்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: பொருட்களை தேவையில்லாமல் ஆசைப்பட்டவற்றையெல்லாம் வாங்கிக்குவிப்பது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு எத்தனை ஆடைகள் தேவைப்படும்? ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்ணாயிருந்தால் அவருக்கு 5 முதல் 10 சேலைகள் தேவைப்படலாம். செல்வந்தர்களாக இருந்தால் 10 முதல் 20 சேலைகள் வாங்கி அணியலாம். இவையெல்லாம் மிதமான தேவைகள். ஆனால் தற்காலத்தில் என்ன நடக்கிறது? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் சட்டை துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suit case) வைத்து கொடுக்க்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராய் இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான் தாயகம் திரும்பும்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரையில் வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார். இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை!
மேலும் சில பெண்கள் திருமணத்திற்கு அழைப்பின்பால் செல்லும் போது ஒரு புதிய சேலையை அணிந்துக் கொண்டுதான் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு ஊரில் ஒருவருடத்தில் 25 திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு புதுப்புடவை வீதம் 25 புடவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் கூட இப்படிபட்ட வீண்விரயத்தை செய்யக்கூடாது என்று இருக்கும் போது நடுத்தரவர்க்க மக்கள் இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்து பொருளாதாரத்தை அழிக்கலாமா? இதை இறைவன் மறுமையில் விசாரிக்க மாட்டான் என்று இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
நான்காவது காரணம்: பெண்களிலும் சரி, ஆண்களிலும் சரி, தனது வீட்டை மற்றவர்களைவிட அலங்கரிக்க வேண்டும் என்ற மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. வீடுகட்டும் பொழுது அவ்வீடு அங்கு குடியிருக்கப்போகும் குடும்பத்தினருக்குப் போதுமான வசதியுடையதாகவும், போதுமான அறைகள் உடையதாகவும் இருக்கவேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமும். ஆனால் வீட்டின் உட்புறம் செய்யக்கூடிய வசதியைவிட வீட்டிற்கு வெளிப்புறமும் முகப்பிலும் பெரும் அலங்காரங்களை செய்தும், தூண்களை கட்டியும், மேலும் மார்பில் (marble) போன்ற சலவைக்கற்களை சுவரெங்கும் பதித்தும் அலங்காரம் செய்வது வீண்விரயமாய் ஆகாதா? அதிலும் முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளைவிட முஸ்லிம்களின் வீடுகள் வீண் அலங்காரங்களின் உறைவிடமாக காட்சி அளிக்கின்றன.
எனக்குத் தெரிந்த ஒருவர் – என்னுடன் சிறுவயதில் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர் – ஒரு மிகப்பெரிய அலங்காரமான வீட்டைக் கட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவருடைய தகப்பனார் கற்கோட்டையைப் போன்ற ஒரு பெரிய வீட்டை கட்டிவைத்துவிட்டுத் தான் மரணம் அடைந்தார். மகனுக்கு அந்த பழைய மாடல் வீடு பிடிக்கவில்லை. ஊரில் மதிப்பாகவும், அலங்காரமாகவும் புதிய வீட்டில் வாழ ஆசைப்பட்டார். ஆகையால் பழைய வீட்டை முற்றாக இடித்துவிட்டு அதே இடத்தில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டை கட்டிவிட்டார். இச்செயலை என்னவென்று கூறுவது? தன் தகப்பனார் கட்டிய வீட்டில் சிறுசிறு திருத்தங்களைச் செய்து அவர் நினைவாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? அல்லது வேறொரு இடத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தாலும் பரவாயில்லை! தற்காலத்தில் முஸ்லிம்களின் ஆடம்பரம் எல்லைக் கடந்து விட்டதை மேற்கூறிய ஒரு உதாரணத்தைக் கொண்டே அறியலாம்.
முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் – ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் – தனது ஆசையென்ன? வாழ்க்கைக்கு தேவையானவை என்னென்ன? என்று உணர்ந்துக் கொள்ளவேண்டும். மறுமை நாளை நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் இந்த ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்துக் கொண்டால் இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டும், அதேசமயம் வீண்விரயமும் செய்யாமலும் இறைவனுடைய உவப்பைப் பெற்று வாழலாம். நமது ஆசைகள் எவை, தேவைகள் எவை என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? அதை அடுத்த பகுதியில் (PArt-2) இன்ஷா அல்லாஹ் காண்போம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக