26 மே, 2012

பெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்!


''பனை மரம் செத்த காலம் பஞ்சப் பேயி வந்த காலம் டோய் - கிராமப் புறங்களில் பேச்சுவாக்கில் இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். வேடிக்கையாகச் சொல்லும் இந்த வார்த்தை இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய் எங்கும் வறட்சி. தென் மாவட்டக் கிராமங்கள் குடிக்கக்கூட தண்­ரின்றி கிராமம் கிராமமாக காலியாகி வருகின்றன. வெறுமை சூழ்ந்து பூட்டிக் கிடக்கும் வீடுகளே இன்றைக்கு பெரும்பான்மையான கிராமங்கள். 

கிராமங்களில் நிலைமை இப்படியிருக்க நகர்ப்புறங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பயங்கரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. காசு கொடுத்தும் தண்­ர் கிடைக்காத அளவிற்கு மாநகர்களில் இன்றைக்கு ''குடிநீர்ப் பஞ்சம்.'' விளைவு - நகரத்துக் கடைகள் தோறும் கடையின் முகப்பை மறைத்தபடி தொங்குகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ''வாட்டர் பாட்டில்கள்.'' தவிச்ச வாய்க்கு தண்­ர் கொடுத்து விருந்தோம்பிய விவசாயிகள் இன்றைக்கு ''வாட்டர் பாக்கெட்'' விற்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 

மக்கள் படும் இப்பாடு போதாதென்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குடிநீரை ''கண்டபடி எடுத்துக் கொள்ளும் உரிமையை'' தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இருக்கிற ''தண்­ர்ப்பஞ்சம்'' போதாதென்று பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செயற்கையான முறையில் ''குடிநீர்ப் பஞ்சத்தையும் உருவாக்கி விட்டார்கள். ''முதலாளித்துவம் எதனையும் காசாக்கும் கூர்மையான அறிவு படைத்ததாகும்'' என்று அறிஞர் மார்க்ஸ் கூறியது போல இன்று அது குடிநீர்ப் பஞ்சத்தையும் காசாக்கி வருகிறது ''மினரல் வாட்டர்'' எனும் பெயரில்.
 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் இந்தியாவில் ''மினரல் வாட்டர்'' என்ற பெயருடன் 1967 ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது. பெல்ஸ் பிஸ்லரி (Bisleri) எனும் இத்தாலியப் பெரு முதலாளி முதன் முதலில் இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்த நாடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களுடன் தண்­ரைச் சேர்த்து சுத்திகரிப்பு செய்து, மினரல் வாட்டர் என ''உல்டா'' செய்தும் ''உடல் நலத்திற்கு மிகவும் நல்லது'' என்று பசப்பு வார்த்தை கூறியும் விற்பனை செய்தார்கள். அதே உல்டாவை இந்தியாவில் செயல்படுத்த நினைத்த முயற்சி எடுபடவில்லை. உல்டாவை தொடர்ந்து செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். 1993 -ஆம் ஆண்டு கோ கோ கோலா கம்பெனி குடிநீர் விற்பனையில் ஆணித்தரமாக காலூன்றியது.
 

1998 - ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் குடிநீர் சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ''சாதாரண குடிநீர் பாட்டில்களில் மினரல் வாட்டர் என்று போடக்கூடாது'' என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பன்னாட்டுக் கம்பெனிகள் எல்லாம் ஒன்று கூடி ''பாதுகாப்பான் குடிநீர்'' என்ற பெயரை மாற்றி, மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். இது தான் இந்திய பாட்டில் குடிநீர் வரலாறு.
 

''மினரல் வாட்டர்'' என்ற ஒரு பெயர் மயக்கத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் மற்றும் வியாபார யுக்திகளின் மூலமாக ஏற்படச் செய்து. பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் கம்பெனிகள் விற்பனை செய்வதெல்லாம் சுத்திகரிக்கப்பட்ட சாதாரண குடிநீரே. பாட்டிலில் உள்ள லேபிளை சற்று உற்று நோக்கினால் எங்குமே ''மினரல் வாட்டர்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படிப் போடுவது சட்டப்படி குற்றம். எனவே இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன தெரியுமா? Pure Water/ Purified Drinking Water/ Packed Drinking Water/ Protected Water/ Bottled Water என்ற வார்த்தைகளைத்தாள். ஆனால் நாமோ ''மினரல் வாட்டர்'' என்று கூறிக் கொண்டு ''எனர்ஜி டானிக்'' குடிப்பது போல் குடித்து மகிழ்கிறோம்[!] இந்த வாட்டர் வகைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் பெப்சி (Aquafina), கோகோகோலா(KinleY). பிரிட்டானியா(Evian), கோத்தாரி(Yes, ganga), கோத்ரேஜ் (Aquapure), நெஸ்லே மெக்டவல், சாபோல்ஸ் (Sabols) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள்தான்.
 

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கையில் சூட்கேஸைப் பிடித்துக்கொண்டு, மறுகையில் வாட்டர் பாட்டிலை ஏந்திக் கொண்ட செல்வோரை ''சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்'' என்று மிரட்சியுடன் பார்த்த காலம் இருந்தது. வாட்டர் பாட்டிலை வெளிப்படையாக எடுத்துக் செல்வது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. கலர்பான கம்பெனிகளுக்கும், குடிநீர் விற்பனை கம்பெனிகளுக்கும் ஒரு கடுமையான வியாபாரப் போட்டியே கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
 

இந்தியாவில் 1994-ஆம் ஆண்டு தான் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை பரவலாக்கப்பட்டது. 1998-99 இல் 80%, 2000 இல் 150%, 2001 இல் 400%, 2003 இல் 600% என்ற வளர்ச்சி வேகத்தில் குடிநீர் வணிகம் நடந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ.800/- கோடிக்கு விற்பனை செய்தார்கள். 2004-ஆம் ஆண்டில் ரூ.5200/- கோடிக்கு இந்தியாவில் குடிநீரை விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
 

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குடிநீர் விற்பனை அதிகமாகப் பெருகியுள்ளது. தமிழகத்தில் ரூ.750/- கோடிக்கு குடிநீர் விற்பனையை இலக்கு வைத்து வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் சென்னையில் 2002-ல் ரூ.200 கோடிக்கு இருந்த குடிநீர் சந்தையை 2003-ல் ரூ.300/- கோடிக்கு உயர்த்தியுள்ளார்கள். 2004-ல் ரூ.500/- கோடிக்கு குடிநீர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் கேரளாவிலோ 20% க்கு மேலாக குடிநீர் விற்பனையைப் பெருக்க முடியவில்லை. அங்குள்ள தென்னை மரம் வளர்ப்போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் இணைந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் முயற்சியை முறியடித்தனர். தண்­ரை விற்றால் இளநீர் வியாபாரம் பாதிக்கப்பட்டு ரத்தக் கண்­ர் சிந்த வேண்டிய அபாய நிலை வருமென்று முன்கூட்டியே உணர்ந்து போராடி குடிநீர் வியாபாரத்தை முடக்கிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் போராடிய மக்களையெல்லாம் இங்குள்ள கட்சிகள் (ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர) வேடிக்கை பார்த்தன.
 

சமீபத்திய விளம்பரம் ஒன்றில் ஒரு சொகுசு காரின் ரேடியேட்டரில் பாட்டில் குடிநீரை ஊற்றுவது போல் காட்டி ''Drink and Drive'' என்ற வாசகத்தையும் காட்டுகிறார்கள். அதாவது ''மனிதர்கள் மட்டுமல்ல.. இயந்திரங்களும் குடிநீரையே உட்கொள்ளும்'' என்று. ஆகா! பலேபலே! ஆனால் நம்மவர்கள் தான் பாவம். வாட்டர் பாட்டில் வாங்கி ''ரேடியேட்டரில்'' ஊத்திக் தொலைக்கிறார்கள் [!]
 

இத்தகைய பெரும் வணிகச் சுரண்டலை நடத்தும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனத்தினர் ''மினரல் வாட்டர்'' வாங்கச் சொல்வதன் காரணம் என்ன தெரியுமா? ''நகராட்சி குழாய்களில் வரும் தண்­ர் சுத்தமானதாக இல்லை. குடிநீர் வடிகட்டி சாதனம் சரியாக வேலை செய்வதில்லை. எனவே வெளிநாட்டு நவீன முறைப்படி வடிகட்டப்பட்ட சுத்தமான தண்­ரை வாங்கி அருந்துங்கள்'' என்பதே. அப்படியானால் இவர்கள் விற்பனை செய்யும் ''பாட்டில் குடிநீர்'' உண்மையிலேயே தரமானதா? அதுதான் இல்லை.
 

சமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றப்புறச் சுழல் மையம் (Centre for Science and Environment) என்ற அமைப்பு பாட்டில் குடிநீரை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில் 21 நிறுவனங்களின் ''பாட்டில் குடிநீரில்'' விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. பிஸ்லரி, ந்துஸ்தான் கோகோ கோலா, சர்டிமில்க் புட், பெப்சி, கோ, கோத்தாரி, வைபவா, சர்துல் மினரல், வைஷாலி மினரல் என தடைசெய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் தங்களை ''மினரல் வாட்டர்" என்று கூறிக்கொண்டவைகள். இவர்கள் பாஷையில் 32 வகையான நஞ்சைக் கலப்பது தான் ''மினரலோ'' ! [?] இருக்கலாம்.
 

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏதோ பெட்ரோல், டீசல் நிலையம் திறப்பதைப் போல ''குடிநீர் நிரப்பும் நிலையம்'' திறக்கப்பட்டுள்ளது. சாயி எண்டர் பிரைசஸ் கம்பெனியிலிருந்து 300 மி.லி. ரூ.1 (பிளாஸ்டிக் பையுடன் ரூ.2க்கும்) 1 லிட்டர் ரூ.2 (பிளாஸ்டிக் பாட்டிலுடன் ரூ.6க்கும்), 5 லிட்டர் ரூ.10 (பிளாஸ்டிக் கேனுடன் ரூ.25க்கும்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே ஒரு வியாபார மோசடியையும் நாம் கவனிக்க வேண்டும். விளம்பரம், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் எதுவுமின்றி நேரிடையாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் ரூ.6 என விற்கப்படுகிறது. அதே குடிநீரை மற்ற கம்பெனிகள் வெளியில் விற்றால் 1லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.12. ஆனால் ரயில் நிலையத்திற்குள் விற்றால் ரூ10. ஒரு லிட்டர் குடிநீருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.4 கூடுதலாகவும், வெளியே ரூ.6 கூடுதலாகவும் என ''ரேட் பிக்சிங்'' செய்து கொண்டு பொது மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.
 

''ஆசியாக் கண்டத்திலேயே சிறந்த குடிநீர்'' என்று கூறப்படும் கோவை சிறுவாணி குடிநீரைக்கூட ஒரு லிட்டர் ஒரு காசு என தமிழ்நாடு குடிநீர் வாரியம் விற்பதில்லை. ஆனால் நயா பைசா பெறாத குடிநீரை ஒரு லிட்டர் ரூ.12/- க்கு தனியார் கம்பெனிகள் IS:14543 தர முத்திரை என்ற பெயரில் விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டாமா? ''ஊழலற்ற நேர்மையான அரசு'' என கூறிக்கொள்ளும் தமிழக அரசு இதில் ஏன் தயக்கம் காட்டுகின்றது?
 

சென்னையில் TEAM என்ற நிறுவனம் குடிநீரை ''மூலிகை நீர்'' (Herbal Water) என்று பெயரிட்டு ''சருமத்திற்குப் பாதுகாப்பு'' என்று கூறி 20 லிட்டர் கேனை ரூ.100/- க்கு விற்பனை செய்கிறது. இதே போன்று தமிழகமெங்கும் ஆங்காங்கே போலிப் பெயர்களுடன் வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றவையா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்து விடுகிறோம். எந்த தேதியில் ''பேக்கிங்'' செய்யப்பட்டது? எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது? என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இது போன்ற பல்வேறு ''குடிநீர் விற்பனைக்'' கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா [!?] என்பதே தெரியவில்லை. இவைகள் தத்தமது போக்கில் வியாபாரங்களை நிகழ்த்தி வருகின்றன.
 

குடிநீர் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் கிண்டி தண்­ர் பரிசோதனை நிலையம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வுக்கூடம் ஆகியவை மட்டுமே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. 1971- ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல இடங்கயில் குடிநீர் ஆய்வுக் கூடங்களை நடத்தி வருகிறது. அவைகள் அனைத்தும் தற்போது சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல. எனவே அவைகளுக்கு 1974-ஆம் ஆண்டு தண்­ர்ச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய பிரிவு 12, 13 இன்படி ஆவன செய்ய வேண்டும். அதுவரை குடிநீர் வாரிய ஆய்வுக் கூடங்களின் பரிசோதனை முடிவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மத்திய ஆய்வுக் கூடத்தின் கீழ் சட்ட ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இன்றைக்கு IS:14543 இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரம் என்ன? என்பதை தெளிவு படுத்த அரசுகளோ தனியார் நிறுவனங்களோ விளம்பரம் செய்யவில்லை. நாமும் நாள் பட்ட ''பாட்டில் குடிநீரை'' க் குடித்து விட்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றப்போக்கு, மஞ்சள் காமாலை காலரா மற்றும் žதபேதியில் சிக்கி žரழிந்து கொண்டிருக்கிறோம்.
 

தரமான குடிநீர் தேவையான அளவு பொதுமக்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் அன்றாடம் உடலிற்குத் தேவைப்படும் குடிநீர்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசுக்கு குடிநீர் வாங்கிக் குடித்து விடுகின்றனர். சாதாரண மக்கள்....? இதனால் சாதாரண, நடுத்தரத்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கு ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழியாக குறைந்த விலைகளில் பாட்டில் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்சினையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்....? யானைகளுக்கு இன்பச் சுற்றுலா கொடுத்த அரசு மக்களின் துன்பம் பற்றி செவிசாய்க்குமா?
 

வீட்டுக்கு வந்த உறவினர்களை மோரும் பழரசமும் தந்து உபசரித்த தமிழர்கள் இன்று. நள்ளிரவில் உறங்கக்கூட முடியாமல் தண்­ருக்காக அலைகிறார்கள். குழாயடிகளில் திடீர்ச் சண்டைகள், வெட்டு, குத்து. ''தண்ணிக்குப் போயி சண்டையா''....? என்று ''பெரிசுகள்'' அதிர்ந்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ''போர்'' போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

நன்றி: புதியகாற்று

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons