6 ஜன., 2012

லேப்டாப்... வசதியா? அசதியா?


உலகையே உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது விஞ்ஞானம். ஆனாலும், அதற்கு விலையாக அடுக்கடுக்கானப் பிரச்னைகளும் நம்மிடத்தில் அணிவகுத்து நிற்கின்றன!
'கைக்கு அடக்கமாக இருக்கும்; எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம்’ என்பதாலேயே 'லேப்டாப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்! குறிப்பாக, பிஸினஸ் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் - வெளிநாடு என பறந்து கொண்டே இருப்பவர்களிடையே லேப்டாப்பின் பயன்பாடு ரொம்பவே அதிகம்.
தற்போது கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. இப்படி பல்வேறு துறையினரும் லேப்டாப் பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், 'அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்’ என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து பொது மருத்துவர் ராஜாமணியிடம் கேட்டோம்.
'கம்ப்யூட்டரைப் போல ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், பெரும்பாலானவர்கள் லேப்டாப்புக்கு மாறி வருகிறார்கள். மடியில் வைத்துப் பயன்படுத்துதல், படுத்துக்கொண்டே பயன்படுத்துதல், ஹாயாக தரையில் உட்கார்ந்துகொண்டு பயன்படுத்துதல் என ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கேற்ப விதவிதமான முறைகளில் லேப்டாப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும், குறிப்பிட்ட நேரம்தான் என்றில்லை... மணிக்கணக்காக அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால் இடுப்பு, கழுத்து, மூட்டு, தோள்பட்டை என உடம்பில் பல இடங்களில் வலி தோன்றும்.
குறிப்பாக, நீண்ட நேரம் டைப் செய்யும்போது, மணிக்கட்டுப் பகுதிக்கு ரத்தம் வருவது குறைந்து வலி உண்டாகும். விரல்களிலும் இந்தப் பாதிப்பு இருக்கும். எனவே, தொடர்ந்து தட்டச்சு செய்யவேண்டிய வேலை இருந்தால், அவ்வப்போது விரல்களுக்கு ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். விரல்களை நீட்டி மடக்குவது போன்ற சிறிய பயிற்சிகளையும் செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து, புத்துணர்வு ஏற்படும்.
மடியில் லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தும்போது, அதில் இருந்து வெளியாகும் அதிக சூட்டினால் ஆண்களின் விதைப்பை பாதிக்கப்பட்டு, விந்தணுக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் 'குழந்தைப் பேறு கிடைப்பதிலும் சிக்கல் உண்டாகலாம்’ என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, சூட்டினால் மடியில் எரிச்சல், புண் போன்ற சருமப் பாதிப்புகள் வரலாம்.
சிலர் துணி அல்லது தலையணையை மடியில் வைத்து, அதன்மேல் லேப்டாப்பை வைத்துக் கொள்வார்கள். இப்படிச் செய்வதால், லேப்டாப்பில் இருந்து வரும் வெப்பம் தங்களைத் தாக்காது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறான விஷயம். ஏனெனில், வெப்பம் வெளியேற வழி இல்லாமல், லேப்டாப் இன்னும் அதிகமாக சூடாகும். சில சமயங்களில் வெடித்து விடவும் வாய்ப்புண்டு.
லேப்டாப்பை மடியிலோ அல்லது தரையிலோ வைத்துப் பயன்படுத்தும்போது குனிந்தே இருப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி உண்டாகும். சிலர் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்யும்போது மார்பு வரை உள்ள உடல்பகுதி மட்டுமே படுக்கையில் பதிந்திருக்கும். தலையும், கழுத்தும் மேலே தூக்கி இருக்கும். இதனால் முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.
இப்படித்தான் அமர வேண்டும், படுக்க வேண்டும் என வரைமுறை இருக்கிறது. இந்த வரைமுறைகளை மீறும்போதுதான் மேற்கண்ட பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, மேஜை அல்லது அதற்குச் சமமான உயரம் கொண்ட இடங்களில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு முதுகு வளையாமல் வேலை செய்யலாம். மேலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில், உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதுதவிர அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவும் செய்யலாம்.
அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இருக்கும் இடங்களில் லேப்டாப் பயன்படுத்தும்போது, அதிகமான ஒளி லேப்டாப் திரை மீது பட்டு, எதிரொளிக்கும். இதனால், கண்களில் உள்ள ரெட்டினாவில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதற்குத் தகுந்தாற்போல் திரையின் பிரகாச அளவை மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது!'

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons