17 ஜன., 2012

வாடகை வீடு... A to Z கைடு!

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்!

புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம்!

ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது!

இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.

அக்ரிமென்ட் அவசியம்..!

''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.

வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.

பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!

பதிவுக் கட்டணம் எவ்வளவு?

அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.

அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.

அட்வான்ஸ்

''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!''

வாடகை!

''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு. 

ரசீது அவசியம்!

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம். 

வாடகை தர மறுத்தால்..?

'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும். 

காலி செய்ய வைக்க..!

குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.

வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.

வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.

இப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம்தான்!
நன்றி விகடன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons