‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்றுதான் தகுதிக்கு மீறி செலவு செய்து பிள்ளைகளுக்கு மணமுடித்து வைக்கிறோம். உற்றாரும் உறவினரும் கூடி வாழ்த்தி அத்தனை சம்பிரதாயங்களோடும் நடைபெறுகிற எல்லாத் திருமணங்களும் வெற்றியடைகின்றனவா என்றால்… இல்லை என்றுதான் வருத்தத்தோடு சொல்லவேண்டி இருக்கிறது.
‘‘சமீப வருடங்களாக விவாகரத்து வழக்குகள் பதிவாவது அதிகரித்து வருகின்றன’’ என்று கவலைப்படுகிறார்கள் குடும்ப நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
‘‘இந்தக் காலத்து இளம் தம்பதிகளுக்கு பொறுமையே இல்லை. சின்னப் பிரச்னைகளைக்கூட தாங்கமுடியாமல் சட்டென்று கோர்ட் படி ஏறி விடுகிறார்கள்’’ என்று திருமண கவுன்சிலர்கள் அதற்கு ஒரு விளக்கம் சொல்ல, ‘‘இன்றைய தலைமுறை பக்குவமாகத்தான் நடந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறுசுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில் பெரியவர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது’’ என்று கை நீட்டுகிறார்கள் மனநல மருத்துவர்கள்.
தப்பு யார் மீது என்றாலும், ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு இல்லத்தையும் மகிழ்ச்சிப் பூந்தோட்டமாக ஆக்கமுடியும் என்பது நாம் அறிந்ததுதான். அப்படி, மணக்கோலம் காண உள்ள பெண்களுக்கும் இளம் மனைவிகளுக்கும் இனிய இல்லறத்துக்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைச் சொல்வதுதான் நோக்கம்.
படித்துப் பாருங்கள். வாழ்க்கையை உணருங்கள். விவாகரத்து என்ற வார்த்தைக்கே விடைகொடுப்போம்!
நல்ல உறவுக்கு நான்கு விஷயங்கள்!
‘‘ஒண்ணு, ரெண்டு வார்த்தைகள்ல சொல்லி முடிக்கற விஷயமா அது? முன்னாடியெல்லாம் 17, 18 வயசுலயே கல்யாணம் பண்ணிடுவாங்க… பெண்களுக்குனு தனியான கருத்து, விருப்பம் இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத காலம் அது. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுப் புதைச்சுக்கிட்டதாலயே பிரச்னைகள் வெடிக்க இடமில்லாம போயிடுச்சு. ஆனா, இப்போ காலம் மட்டுமில்ல… பெண்களுக்கும் விழிப்பு உணர்வு வந்து ரொம்பவே மாறியிருக்காங்களே…’’
- ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்கள், பிரச்னையே இல்லாமல் வாழ வழி சொல்லுங்களேன்’ என்று கேட்டபோது, இப்படித்தான் ஆரம்பித்தார் பிரபல மனநல ஆலோசகரும் திருமண கவுன்சிலருமான பிருந்தா ஜெயராமன்.
‘‘படிப்பு, வேலை, வருமானம், சுதந்திரமான சிந்தனைனு பெண்கள் இப்ப ரொம்பவே மாறிட்டாங்க. சுயமா தன் கால்ல நிக்கற ஒரு பொண்ணு, போற இடத்துல தன்னை செட்டில் பண்ணிக்க கொஞ்சம் காலம் ஆகும். ஒரு இடத்திலேருந்து பிடுங்கி இன்னொரு இடத்தில் நடும் செடிக்கே, அது வேர்விட கொஞ்சம் கால அவகாசம் கொடுக்குற நாம, வேறொரு குடும்பத்திலேர்ந்து வாழ வர்ற பொண்ணுக்கு புது இடத்தோட சூழலை புரிஞ்சுக்கிட்டு ஒன்றிப் போறதுக்கு நேரம் கொடுக்கிறதில்லை. அதுதான் பல இடங்கள்ல பிரச்னையா வந்து நிக்குது.
ஒரு உதாரணம் பாருங்க…
எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பத்துல கல்யாணம் முடிஞ்ச மறுநாள், மாமியார் பொண்ணைக் கூப்பிட்டு, ‘பாத்ரூம்ல துணிகள் கிடக்கு.. போய் துவைச்சுப் போடும்மா’னு சொல்லியிருக்காங்க. உடனே, அந்தப் பொண்ணு, ‘ஐயய்யே.. அதெல்லாம் என்னால முடியாது. எங்கம்மா வீட்டுலகூட ஒருநாளும் நான் துணி துவைச்சதில்ல’னு சொல்லியிருக்கா. அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்னை. இன்னிக்கு வரை எல்லாத்திலும் தொடருது. மாமியாருக்கும் மருமகளுக்குமான இந்த மனக்கசப்பு, கணவன் மனைவிக்கு இடையிலும் ஊடுருவி, நெருடல் ஏற்படுத்திடுச்சு.
இதே விவகாரத்தை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். முன்னெல்லாம், வீட்டுல பெண் பிள்ளைகளுக்கு எல்லா வேலைகளையும் கத்துக்கொடுத்து, பொறுப்பா வளர்த்தாங்க. ஆனா, இப்ப செல்லமா வளர்க்கிறேன் பேர்வழினு அவங்கள ஒரு வேலைகூட செய்ய விடறதில்லை. இதனால பாதிக்கப்படப் போறது நம்ம பொண்ணுதானேனு பெத்தவங்க யோசிக்கணும். நான் முதல்ல சொன்ன சம்பவத்துக்கு அந்த மாமியாரும் காரணம் தான்னாலும் பெண்ணை தயார்ப்படுத்தாத அம்மா மேலயும் தப்பிருக்கு?’’ என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன்,
‘‘கல்யாணத்துக்கப்புறம் முக்கியமான நாலு ஏரியாக்கள்லதான் பிரச்னை வருது…’’ என்று தொடங்கி அவற்றை விரிவாக விளக்கினார்.
‘‘உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ்… இவைதான் அந்த நாலு ஏரியாக்கள். முதல்ல, உணர்வுபூர்வமா வர்ற பிரச்னை பத்தி சொல்லிடறேன்.
உடம்புக்கு முடியாம தான் படுத்திருக்கறப்ப, ‘என்னாச்சும்மா? டல்லா இருக்கே…’னு கணவன் அக்கறையா விசாரிக்கணும்னுதான் ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்ப்பாள். அதுபத்தி கணவன் ஒரு வார்த்தையும் கேக்கலைனா வருத்தப்படுவாங்க. அடுத்து அந்த வருத்தம், ‘இதே எங்க வீடாயிருந்தா, எங்க அப்பா, அம்மா துடிச்சுப் போயிருப்பாங்க. என் அக்கா வீட்டுக்காரர்லாம், அக்காவுக்கு ஒண்ணுன்னா, அப்டியே பறந்துடுவாரே’ என்று ஒப்பிட்டபடி வார்த்தைகளா வெளில வரும். அப்புறம், விவாதம் ஆரம்பிக்கும். பிரச்னை வெடிக்கும்.
பொருளாதாரம் சார்ந்த பிரச்னை தனிக்குடித்தனமா, கூட்டுக் குடும்பமாங்கிறது முதல், மனைவி வேலைக்குப் போகலாமா வேண்டாமாங்கிறது வரை இதுலதான் வரும். சம்மந்தப்பட்ட ரெண்டு குடும்பமும் கல்யாணத்துக்கு முன்னாலேயே பேசிக்கிறது மூலமா, இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே தடுத்துடலாம்.
மூன்றாவது, சமூகம். மாமியார், நாத்தனார் பிரச்னை எல்லாம் இதுலதான் வருது. சிலசமயம் பெண்ணோட அம்மா, அப்பா மூலமா கூட பிரச்னை வரும். ‘உன் ஓரகத்தி வேலைக்குப் போறதால, அவ குழந்தைக்கு நீ வேலைக்காரி இல்லை. ஆரம்பத்திலேயே எச்சரிக்கையா இரு. இல்லேன்னா, உன் தலையிலயே எல்லா வேலையையும் கட்டிருவாங்க’னு புத்திமதி(?) சொல்ற அம்மாக்கள் உண்டு. ‘அந்த வீடு உன் வீடும்மா. அவுங்க உன் மனுஷங்க.. உன்னால முடிஞ்ச அளவுக்கு வேலைகளைப் பாரு. சீக்கிரமா எல்லார் மனசுலயும் இடம் பிடி’னு சொல்லி அனுப்பணும். ஆனா, இப்படிச் சொல்ற அம்மாக்கள் ரொம்பக் குறைவுங்கிறதையும் நாம வருத்தத்தோட ஏத்துக்கணும்.
நாலாவது, செக்ஸ் ரீதியான பிரச்னை. பல பெண்களுக்கு தாம்பத்யம் பற்றிய தெளிவான அறிவு இல்லை. கல்யாணம் நிச்சயமாகி இருந்த ஒரு பெண்ணை என்கிட்ட கவுன்சிலிங்குக்காக அழைச்சுட்டு வந்தாங்க. எடுத்ததும் செக்ஸ் பத்தி பேசினா மிரண்டுடுவானு, முதல் ரெண்டு சிட்டிங் பொதுவா பேசி, அவளை ரிலாக்ஸ் பண்ணினேன். அதுக்கப்புறம், தாம்பத்ய உறவு பத்தி நான் விளக்க ஆரம்பிச்சதும் அவ முகம் போன போக்கை பாக்கணுமே..! செக்ஸ் பத்தி பேசறதையே சகிச்சுக்க முடியாத பொண்ணு, எப்படி கணவனோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வா?
அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின பையன் ஆசைப்பட்டு கூப்பிட்டாலும் அவன்கூட வெளில போக தயங்குறா. இந்த தயக்கத்தை சரி பண்ணாம கல்யாணம் பண்ணினா, நிச்சயம் அவங்களுக்குள்ள பிரச்னை வரும். கல்யாணத்துக்கு முன்னால செக்ஸ் பத்தின பயமோ, தயக்கமோ இருந்தா டாக்டர் அல்லது கவுன்சிலர் மூலம் அதை அகற்ற வேண்டியது ரொம்ப அவசியம்…’’ என்று விவரித்த பிருந்தா ஜெயராமன்,
‘‘கல்யாணமான முதல் ஒரு வருஷம் ரொம்ப முக்கியமான காலகட்டம். அந்த சமயத்துல உணர்ச்சிவசப்படாம, புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவாரம் போட்டுட்டதா அர்த்தம். அதுக்கப்புறம் எப்படிப்பட்ட பிரச்னையையும் சுலபமா ஊதித் தள்ளிட முடியும்’’ என்றார் உறுதிபட.
அவரே, ஆரம்பகட்டத்தில் எழுந்த சிறுகீறல் பின்னர் பெரும் விரிசல் ஆன கதை ஒன்றையும் சொன்னார்.
அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டில் பிறந்த நாள் விழாக்களை ரொம்பப் பிரமாதமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், புகுந்த வீட்டிலோ மிகவும் எளிமையாக கோயிலில் ஒரு அர்ச்சனையோடு முடித்துக் கொள்வார்கள். இது அந்த பெண்ணுக்குத் தெரியவில்லை.
அவளது பிறந்தநாள் அன்று ஆரம்பித்தது பிரச்னை.
‘நடுராத்திரி 12 மணிக்கு எங்க வீட்டுல கேக் வெட்டுவாங்க. காலையிலேர்ந்து எங்க அப்பா, அம்மா, அண்ணா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போட்டி போட்டுட்டு விஷ் பண்ணுவாங்க.. கிஃப்ட்ஸ் தருவாங்க. ஆனா, இந்த வீட்டுல ‘ஹேப்பி பர்த்டே’னு வாழ்த்து சொல்லக்கூட யாருக்கும் மனசில்லே’ என்று சண்டை போட்டாள். ‘ஒரு சாதாரண விஷயத்துக்குப் போய் இந்தப் பொண்ணு இப்படி குதிக்குதே…’ என்று புகுந்தவீட்டு ஆட்களுக்கு அதிர்ச்சி. வார்த்தைகள் தடித்தது. அவ்வளவுதான்.. அந்த பிறந்த நாள், வாழ்க்கையில் மறக்கமுடியாத, மிக மோசமான நாளாகிவிட்டது.
தொடர்ந்து நம்மிடம் பேசிய பிருந்தா ஜெயராமன், ‘‘இதுமாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம்கூட சண்டை போடறதை பெண்கள் தவிர்க்கணும். இதே விஷயத்தை இதமா கணவன்கிட்ட அந்தப் பொண்ணு சொல்லியிருந்தா, ‘அடடா… இவ மனசுல இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கா? அதை நிறைவேத்தணுமே’னு பரபரப்பாகியிருப்பார் கணவர். வீட்டுல எல்லார்கிட்டயும் பேசி, பெரிய விழாவுக்கே ஏற்பாடு பண்ணியிருப்பார். அந்த நாளும் வாழ்க்கையில மறக்க முடியாத சந்தோஷ நாளாகியிருக்கும்.
அதேமாதிரி, எளிமையா வளர்ந்த பொண்ணு, ஆடம்பரமா இருக்கிற வீட்டுக்குப் போறப்ப கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். அது மாதிரி சூழ்நிலையில எதுக்கும் கமெண்ட் கொடுக்காம, அமைதியா இருந்துட்டாலே, பிரச்னைகளை தவிர்த்துடலாம்’’ என்றவர் தொடர்ந்தார்…
‘‘தொண்ணூறு சதவிகித வீடுகள்ல மகளுக்கு ஒரு மாதிரி, மருமகளுக்கு ஒரு மாதிரிதான் எல்லாமே நடக்கும். அதுக்குக் காரணம், மருமகளை அவமானப்படுத்தணும்கிற நோக்கம் இல்லை. மகள்கிட்ட உரிமையா நடந்துக்கமுடியும்கிற தாயோட நம்பிக்கை! தன்கிட்டேயும் உரிமை எடுத்துக்கற அளவுக்கு மருமகள் பாசமா நடந்துக்கணுமே தவிர, இதனால மனம் சோர்ந்து உட்கார்ந்துடக் கூடாது.
அதேமாதிரி, மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்னை வர்றப்ப, சின்ன விஷயத்துக்கெல்லாம் கணவனிடம் புகார் சொல்றதை தவிர்க்கணும். அது அவரை தர்மசங்கடமான சூழ்நிலையில் நிறுத்திடும். எந்தப் பிரச்னையா இருந்தாலும், முடிஞ்சவரைக்கும் பொண்ணுங்க தானே தீர்வு காணத் தெரிஞ்சுக்கணும். எடுத்ததுக்கெல்லாம் அம்மாகிட்டே போய்ச் சொல்றதும் தேவையில்லாதது. அவங்க உங்க மேல இருக்கற அக்கறையில், உதவுறதா நினைச்சிட்டு, உங்களையும் குழப்பி, பிரச்னையையும் ஊதி பெரிசாக்கிட வாய்ப்பிருக்கு. பாசம் கண்ணை மறைச்சிடும்! அதனால, தோழியிடமோ, கவுன்சிலரிடமோ ஆலோசனை கேட்கலாம்…’’ என்று ஆரோக்கியமான வழிமுறைகளை பட்டியலிட்டவர், இறுதியாக சொன்னது…
‘‘கடைசியா சொல்றேன்னாலும், இது ரொம்ப முக்கியமான விஷயம். கல்யாணமாகி ஒரு வாரத்துக்குள் தம்பதிக்குள் தாம்பத்ய உறவு நடந்துடறது நல்லது. ஏதாவது பிரச்னைன்னா அதை குடும்பத்தில் வேற யார்கிட்டயும் சொல்லி பயமுறுத்தாம, டாக்டரையோ, கவுன்சிலரையோ போய்ப் பார்க்கணும். இந்த விஷயத்தில் கணவன், மனைவி ரெண்டு பேருமே புரிஞ்சு நடந்துக்கணும். எதிர்பார்த்த அனுசரணை கிடைக்காத ஆண்களுக்கு, மனைவியை பார்த்தாலே எரிச்சல் வரலாம். இதுமாதிரி பிரச்னைகள் வராம தவிர்க்க, இப்போ திருமண கவுன்சிலிங் வகுப்புகள் நடக்குது. அதுல பங்குபெற்று, வரும்முன் காப்பது புத்திசாலித்தனம்…’’
விட்டுக்கொடுப்பதிலும் வேண்டும் எல்லை!
‘புகுந்த வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போவது நல்லதுதான் என்றாலும், அது விபரீதத்தில் போய்முடியவும் வாய்ப்பிருக்கிறது’ என்று மாறுபட்ட கருத்து சொல்கிறார் திருமண கவுன்சிலர் சரஸ்வதி பாஸ்கர்.
‘‘கம்யூனிகேஷன் கோர்ஸ் படிக்கிறவங்களுக்கு 4 டபிள்யூ (W), ஒரு ஹெச் (H) பத்தி சொல்லித் தருவாங்க. அது… வென்(When), வாட்(What), வொய்(Why), வேர்(Where), அப்புறம்… ஹவ்(How) அதாவது, எப்போ பேசணும்? என்ன பேசணும்? ஏன் பேசணும்? எங்கே பேசணும்? எப்படி பேசணும்? இந்த ஐந்தும் எல்லாருக்குமான பாடம்னாலும், புது இடத்துல வாழப்போற பெண்களுக்கு அவசியமான பாடம்!
ஒரு உதாரணம் சொல்றேன். அந்தம்மாவுக்கு கல்யாணமாகி பல வருஷமாச்சு. புகுந்த வீட்டுல ரொம்ப நல்ல பேரு. ஒருநாள் என்கிட்ட வந்தாங்க. ‘காரணமே இல்லாம என் குழந்தைகளை போட்டு அடிக்கிறேன். கணவர்கிட்ட சண்டை போடுறேன். எனக்கே நான் செய்றது தப்புனு தெரியுது. ஆனா, எப்படி சரிபண்ணிக்கிறதுனு தெரியல’னு கலங்கிப் போய் சொன்னாங்க.
புகுந்த வீட்டுல மாமனார், மாமியார்லருந்து நாத்தனார் வரைக்கும் இவங்களை தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுறாங்க. பிறகென்ன பிரச்னைங்கறீங்களா? பிரச்னையே அதுதான். நல்ல பேர் வாங்கணும்னு, முழுக்க முழுக்க தன்னை மாத்திக்கிட்டாங்க அவங்க.
கல்யாணமான புதுசுல மாமியார் திட்டினாக்கூட பதிலுக்கு ஒரு வார்த்தைகூட பேசாம, அமைதியாவே இருந்திருக்காங்க. எந்தப் பிரச்னைனாலும் முதல்ல விட்டுக் கொடுத்துப் போறது இவங்கதான். வீட்டுல சமையல்லருந்து துணி துவைக்கிறது, பாத்திரம் கழுவுறது, ஓரகத்தியோட குழந்தைகளைப் பாத்துக்கிறது… எல்லாமே இவங்கதான். இத்தனைக்கும் இவங்க ஹவுஸ் வைஃப் கிடையாது. வேலைக்குப் போறவங்க.
வீட்டு வேலை அத்தனையும் பண்ணிட்டு, எல்லா விஷயங்களுக்கும் விட்டுக் கொடுத்தும் போனதோட டென்ஷன் உள்ளுக்குள்ள ஏறி உட்கார்ந்திருக்கு. அது, ஏதாவது ஒரு ரூபத்துல வெளியாகணும் இல்லையா? மாட்டினது அந்தம்மாவோட கணவரும் குழந்தைகளும்தான்.
தினம்தினம் கணவரோட சண்டை. கணவரும் எத்தனை நாள் பொறுப்பார்? பதிலுக்கு அவரும் ஏதோ சொல்லவும், அடுத்ததா அத்தனை கோபமும் பிள்ளைகள் மேல. குழந்தைங்க என்ன கேட்டாலும் அடி, உதை. அப்புறமா… ‘இப்படி தப்பே செய்யாத குழந்தைகளைப் போட்டு அடிச்சிட்டோமே’ங்கிற குற்ற மனப்பான்மையில தனிமையில அழறதுனு பாவம்… ரொம்பவே நொந்து போயிருந்தாங்க.
இந்த நிலைமையிலதான் என்கிட்ட வந்தாங்க. ஆரம்பத்துலருந்து எல்லாத்துக்கும் அடங்கிப் போனதும், தனக்கு தப்புனு பட்டதை சொல்லவேண்டிய விதத்துல சொல்லாம விட்டதும்தான் இன்னிக்கு அவங்கள இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தி இருக்குங்கிறதை விளக்கமா எடுத்துச் சொன்னேன்.
ஆனா, திடீர்னு அவங்க தன்னை மாத்திக்க முடியாது… இல்லையா? அப்படிச் செய்தா, புகுந்த வீட்டு ஆட்கள் குழம்பிப் போயிடுவாங்க. அதோட, இவங்க இத்தனை வருஷமா சம்பாதிச்ச நல்ல பேரும் போயிடும். அதனால, அவங்க நடவடிக்கைகள்ல கொஞ்சம் கொஞ்சமா சில மாற்றங்களை செய்யச் சொல்லி அனுப்பி வெச்சேன்.
அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்துப் போற குணம் எல்லாமே பெண்களுக்கு வேணும்தான். ஆனா, எதுக்குமே ஒரு எல்லை இருக்கு. விட்டுக்கொடுத்துப் போகணுமேங்கிறதுக்காக நம்மளோட சுயமரியாதையையும் மனதிருப்தியையும் இழக்கவேண்டிய அவசியமில்லை. மீறினா, அது மனநோய்லதான் கொண்டுபோய் விடும்.
புகுந்த வீட்டுல அடியெடுத்து வெச்சதுலருந்தே, நீங்க என்ன நினைக்கறீங்க… எந்த அளவுக்கு உங்ககிட்ட மத்தவங்க உரிமை எடுத்துக்கலாம்… எதுக்கு மேல கூடாதுங்கிறதைப் பத்தியெல்லாம் மென்மையான முறையில நீங்க உணர்த்திடணும். அப்போதான் நீங்களும் நல்லா இருக்க முடியும். குடும்பத்துல இருக்கிற மத்தவங்களும் சந்தோஷப்பட முடியும்’’ என்கிறார் சரஸ்வதி.
மறைக்க வேண்டாம்… மனம்விட்டு பேசுங்கள்!
‘‘என்னைப் பொறுத்தவரைக்கும், கணவனும் மனைவியும் தினமும் நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசிக்கிட்டா, எந்தப் பிரச்னையும் வராது. அது கூட்டுக் குடும்பமா இருந்தாலும் சரி… தனிக் குடித்தனமா இருந்தாலும் சரி…’’ என்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் ராஜ்மோகன்.
‘‘சமீபத்துல எங்ககிட்ட வந்த ஒரு தம்பதியோட கதை இது. அவர் பேர் ஷ்யாம்னு வெச்சுக்கலாம். சின்ன அளவுல பிஸினஸ் பண்றவர். தனக்கு வரப்போற பொண்ணு நிறையப் படிச்சிருக்கணும்… பார்க்க ரொம்ப அழகா இருக்கணும்… இது ரெண்டும்தான் ஷ்யாமோட எதிர்பார்ப்பு.
அவர்விரும்பின மாதிரியே பொண்ணும் அமைஞ்சது. கல்யாணம் முடிஞ்சுஊட்டி, கொடைக்கானல்னு ரெண்டு பேரும் ஜாலியா சுத்தியிருக்காங்க. சென்னை வந்தபிறகும் தினமும் பீச், சினிமா, ஷாப்பிங்னு ஆறேழு மாசம் பொழுது போயிருக்கு.
திடீர்னுபார்த்தா, அவரோடதொழில்ல ஏதோ பெரிய பிரச்னை. ஆள் அப்படியே தலைகீழா மாறிப்போய், எந்நேரமும் ஃபேக்டரியிலயே இருக்க ஆரம்பிச்சுட்டாரு. தன்னையே சுத்திச் சுத்தி வந்தவரு, இப்படி ஏன் மாறிட்டாருனு அந்தப் பொண்ணுக்குக் குழப்பமாயிடுச்சு.
ஒருநாள் ரொம்பக் கோபமாகி, நேரா மாமனார் வீட்டுக்குப் (அவங்களும் சென்னையிலதான் இருக்காங்க) போய், ‘என்ன உங்க மகன் இப்படிப் பண்றாரு…’னு கோபமா கேட்டிருக்கா. அதுக்கு அவங்களும் டென்ஷனாகி, ‘என் மகன் எவ்ளோ கஷ்டப்படுறான். அவனைப் புரிஞ்சுக்காம அவனைப் பத்தி எங்ககிட்டயே குறை சொல்றியா? படிச்ச திமிர்ல எது வேணும்னாலும் பேசிடறதா?’னு கொதிச்சிருக்காங்க.
இந்தப் பொண்ணு அந்த வார்த்தையில காயமாகி, கிளம்பி நேரா அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இதுக்கு நடுவுல ஷ்யாமோட அப்பா போன் பண்ணி அவரை வீட்டுக்கு வர வெச்சிருக்கார். அவங்க என்ன சொன்னாங்களோ… ரொம்பக் கோபமா மனைவியைத் தேடிப் போன ஷ்யாம், எதுவும் கேக்காம மனைவியை அவளோட அப்பா, அம்மா முன்னாலயே வெச்சு, பளார்னு அறைஞ்சிட்டார்.
அப்புறம், ‘என் கண்ணு முன்னாடியே என் மகளை நீ எப்படி அடிக்கலாம்?’னு அவங்க அப்பா ஏதோ ஆத்திரமா பேச, விஷயம் ரொம்பப் பெரிசாகி, விவாகரத்து வரை போயிடுச்சு. இந்த ஸ்டேஜ்லதான் என்கிட்ட வந்தார் ஷ்யாம்.
பசங்களும் சரி, பொண்ணுங்களும் சரி, எப்படிப்பட்ட ஜோடி தனக்குத் தேவைங்கிறதுல இன்னமும் குழப்பமாவே இருக்காங்க.
இந்த ஷ்யாமை எடுத்துக்கிட்டீங்கன்னா, அழகான, தன்னைவிடப் படிச்ச பொண்ணு வேணும்னு நினைச்சாரே தவிர, தொழில்னா என்னனு புரிஞ்சுக்கிற, திடீர்னு ஒரு நஷ்டம் வந்தா அனுசரிச்சுப் போற பொண்ணு வேணும்னு நினைக்கல. அந்தப் பொண்ணுக்கும் ‘கணவர் தொழிலதிபர். நிறைய காசு இருக்கு’ங்கிறது தெரிஞ்ச அளவுக்கு ‘தொழில்ங்கிறது ரோலர் கோஸ்டர் மாதிரி… ஒரு நேரம் ஏத்தியும் விடும். இறக்கியும் விடும். நாமதான் அட்ஜஸ்ட் செய்துட்டுப் போகணும்’கிறது தெரியல.
‘எவ்ளோ நகை வாங்கிக் கொடுத்திருக்கேன்… கார் இருக்கு. பங்களா இருக்கு. வேற என்ன வேணும்?’கிறார் ஷ்யாம். ஆனா, அந்தப் பொண்ணு, ‘இப்படி ஃபேக்டரியே கதியா இருக்கிறவர் அதையே கல்யாணம் செய்திருக்க வேண்டியதுதானே…?’னு கேக்கிறா.
யோசிச்சுப் பாத்தா பிரச்னை சின்னதுதான். அதை இவங்களேதான் பெரிசாக்கிட்டாங்க. கணவர் செய்யறது பிடிக்கலைன்னா அவர்கிட்டயே பொறுமையா இந்தப் பொண்ணு எடுத்துச் சொல்லியிருக்கலாம். அதை விட்டுட்டு நேரா மாமனார் வீட்டுக்குப் போய் எகிறினது தப்பு. கம்பெனியில என்ன மாதிரி பிரச்னைகள்… ஏன் இப்படி லேட்டாகுது… இன்னும் எத்தனை நாள் இப்படியாகும்னு மனைவிகிட்ட சொல்லாம விட்டது ஷ்யாமோட தப்பு. ரெண்டு பேரும் அவங்கவங்களோட தேவைகள் பத்தியும் விருப்பு வெறுப்புகள் பத்தியும் மனம் விட்டு பேசிக்கிட்டா எல்லா பிரச்னையும் தீர்ந்துடும்னு சொல்லி அனுப்பினேன். மனத் தெளிவோடு போனாங்க’’ என்ற ராஜ்மோகன்,
‘‘எப்பவுமே கணவனும் மனைவியும் அவங்களோட பிரச்னைகளை அவங்களேதான் தீர்த்துக்கணும். தீர்த்துக்க முடியாத அளவுக்கு சிக்கல் அதிகமா இருந்தா கவுன்சிலர்களை அணுகலாம். அப்படி இல்லாம மூணாவது மனுஷர்கிட்ட போகும்போதே… அது சொந்தப் பெற்றோராக இருந்தாலும், பிரச்னையோட உண்மைத் தன்மை மாறிப்போய் அதுக்கு வேற கலர் வந்துடுது. அப்புறம், உண்மையான பிரச்னையப் பத்தி யாரும் பேச மாட்டாங்க. அதுக்குப் பிறகு நடக்கிற விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும்..’’ என்றார்.
கல்யாணத்துக்கு முன்பே பேசி, சில விஷயங்களில் முடிவு செய்யாமல் விடுவதும்கூட பல பிரச்னைகளை கொண்டுவரும் என்பது இவரது கருத்து.
‘‘உதாரணத்துக்கு வேலைக்குப் போற ஒரு பெண்ணோட குடும்பம், அவளோட வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கலாம். திடீர்னு அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவானா அந்தக் குடும்பம் ரொம்ப சிரமப்படும். அந்தப் பொண்ணுக்கும் தன்னோட பிறந்த வீடு சிரமப்படுறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த மாதிரி சூழ்நிலைகள்ல முன்னாலயே அவர்கிட்ட, ‘கொஞ்ச காலத்துக்கு என்னோட சம்பளத்திலருந்து எங்க வீட்டுக்கு உதவி பண்ண வேண்டியிருக்கும்’னு சொல்லிடலாம். கல்யாணத் துக்குப் பிறகு மெதுவா சொன்னா, ‘பாத்தியா… ப்ளான் பண்ணி இப்போ சொல்றா’னு கணவனுக்குக் கோபம் வரும். பிரச்னை ஆகும். இல்லற வாழ்க்கையோட வெற்றியில பணத்துக்கு நிச்சயமாவே ஒரு பெரிய பங்கு இருக்கு!’’ என்ற டாக்டர் ராஜ்மோகன், கணவன்- மனைவி உறவில் விரிசல் விழாமல் இருக்க, சொன்ன டிப்ஸ்…
‘நீங்க அவரை மாதிரி டிரஸ் பண்ணுங்களேன்… இவரை மாதிரி ஹேர்ஸ்டைல் வெச்சுக்குங்களேன்’ என்று ஒருபோதும் கணவரை பிறருடன் ஒப்பிட்டு பேசவே கூடாது. வெளிப் பார்வைக்கு அந்த கணவர் கண்டுகொள்ளாதது போல தெரிந்தாலும் உள்ளுக்குள் நிச்சயம் புழுங்கிக் கொண்டிருப்பார். ‘நீங்கதான் எனக்கு சூப்பர்மேன்’ என்று அவருக்கு உணர்த்த வேண்டும்.
திருமண ஆலோசனைக்கு குடும்ப நீதிமன்றம்!
‘கணவன் – மனைவி பிரச்னைதான் என்றில்லை; குடும்பத்தில் வரும் எந்தப் பிரச்னைக்கும் எங்களை அணுகலாம்’ என்கிறது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே இயங்கி வரும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு. இங்கே பல வழக்கறிஞர்கள், குறிப்பாக பெண் வழக்கறிஞர்கள், கவுன்சிலர்களாக இலவச ஆலோசனைகள் தருகிறார்கள்.
‘‘என்னோட 33 வருஷ அனுபவத்துல ஏகப்பட்ட 5000 வழக்குகளைப் பார்த்திருக்கேன். குடும்ப நீதிமன்றத்துக்கு வர்ற பெரும்பாலான வழக்குகள்ல அடிப்படை பிரச்னையே கணவனும் மனைவியும் தங்களுக்குள்ள பேசிக்காததுதான்…’’ என்று அழுத்தமாகச் சொன்னார் இங்கே கவுன்சிலராகப்பணிபுரியும் மூத்த வழக்கறிஞர் வி.அகல்யா. இவர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும்கூட.
‘‘தம்பதிகளின் பிரச்னையில்கூடுமானவரை பெற்றோரின் தலையீடு கூடாது’’ என்றவர், அதற்கு உதாரணமாகஒருசம்பவத்தையும் விவரித்தார்.
‘‘அந்த தம்பதிக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல.. ஆனா அவங்க பெற்றோர்கள், சொந்தக்காரங்க இடையில் பயங்கர ஈகோ பிரச்னை.. ‘நீ சொல்லி எங்க பொண்ணு என்ன கேக்கிறது?’னு சண்டை வலுத்து, அவுங்களே புருஷன், பொண்டாட்டியை பிரிச்சு வெச்சுட் டாங்க… ரெண்டு பேரையும் பேசிக்கவே விடலை. ரெண்டு தரப்பினரையும் கூப்பிட்டு கவுன்சிலிங் கொடுத்தபிறகு தெளிவானாங்க. இப்போ சந்தோஷமா இருக்காங்க…’’ என்றவர், இளம் மனைவிகளுக்கு சொன்ன முக்கிய டிப்ஸ்…
‘‘சின்ன சின்ன பிரச்னைகளை பெத்தவங்ககிட்ட கொண்டுபோக வேண்டியதில்லைதான். சிலபேர், பெரிய பிரச்னைகளையும் அதேமாதிரி தனக்குள்ள போட்டு மறைச்சுக்கறாங்க. இது தப்பு.
‘நம்ம அம்மா, அப்பா இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க.. இந்த பிரச்னையெல்லாம் போய்ச் சொன்னா அவங்க வருத்தப்படுவாங்களே’னு நினைச்சு, தனக்கு நடக்கிற கொடுமைகளை சொல்லாம விட்டா, அப்புறம் பெரிய சிக்கலை சந்திக்கவேண்டியிருக்கும்…’’
வழக்கறிஞர் ஏ.பொன்னி, இந்த மையத்தின் மற்றொரு கவுன்சிலர். ‘வீட்டோடு மாப்பிள்ளை’ வாழ்க்கை முறையில் ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டியது பற்றி விவரித்தார் இவர்.
‘‘சென்னைக்கு பக்கத்துல உள்ள ஒரு கிராமம்தான் பையனுக்கு சொந்த ஊர். வீட்டோட மாப்பிள்ளையா வெச்சுக்கிறேன்னு அவரை வேலையை ராஜினாமா பண்ணவெச்சு, சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டார் மாமனார். நாளாவட்டத்துல ‘வீட்டில் வெட்டியா இருக்கறவன்தானே’ங்கிற எண்ணம் வலுத்து, மாப்பிள்ளை மேலிருந்த மதிப்பு, மரியாதை குறைய ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல மாப்பிள்ளை மேல எரிஞ்சு விழ ஆரம்பிச்சுட்டார் மாமனார். கணவருக்கு இப்படியொரு அவமரியாதையானு மனசு நொந்துபோன பொண்ணு, ஒருநாள் பொறுக்க முடியாம தீக்குளிச்சுட்டா. பலத்த காயங்களோட தனியார் மருத்துவமனையில் சேர்த்தாங்க. ஆஸ்பத்திரி பில் லட்ச ரூபாய்க்கு மேல எகிறிடுச்சு.
உடனே, ‘இவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்? உன் பொண்டாட்டிதானே! நீதான் கட்டணும்’னு மாமனார் வற்புறுத்த, மருமகனோ, ‘வேலை பாத்தவனையும் விட்டுட்டு வரச்சொல்லிட்டு, இப்போ பணத்தை கொண்டான்னா, நான் எங்க போவேன்?’னு புலம்ப, இந்தக் கட்டத்துலதான் எங்ககிட்ட வந்தாங்க. அவங்ககிட்ட பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வெச்சோம்.
வீட்டோட மாப்பிள்ளையா போனாலும் தனக்குனு ஒரு சம்பாத்தியம் இருக்கற மாதிரி அந்த மாப்பிள்ளை பார்த்துக்கணும். மனைவிதான் இதை கணவர்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லணும்’’ என்கிறார் பொன்னி.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். மகேஸ்வரி, ‘‘கல்யாணம்னு பேச ஆரம்பிச்சதுமே, ஒரு பொண்ணு தன் மனசுல இருக்கிறதை பெத்தவங்ககிட்ட தெளிவா சொல்லிடணும்…’’ என்கிறார். இவர் சந்தித்ததாகக் கூறிய விவாகரத்து வழக்கு ஒன்று நம்மை அதிர வைத்தது.
‘‘அந்தப் பொண்ணு நர்ஸ். அவளோட கணவருக்காகத் தான் ஆஜரானேன். அவர் ஒரு பேங்க்ல அசிஸ்டென்ட் மேனேஜர். கல்யாணம் முடிஞ்சு, முதலிரவில் அந்தப் பொண்ணு ஒரு குண்டை துக்கிப் போட்டா. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பையனை லவ் பண்ணதாகவும், தான் மூணு மாச கர்ப்பமா இருக்கறதாகவும் சொல்ல… மாப்பிள்ளைக்கு ஷாக். ரெண்டாவது நாள்லயே விவாகரத்து கேட்டு வந்துட்டாங்க.. பரஸ்பர சம்மதத்தோட அவங்களுக்கு விவாகரத்தும் கிடைச்சிடுச்சு. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு,தான் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா’’ என்ற மகேஸ்வரி,
‘‘கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்குத் தன்னோட காதலை வீட்டுல சொல்ல தைரியம் இல்லாம போயிடுச்சு. அதனால எவ்வளவு பிரச்னை பாருங்க. சம்பந்தமே இல்லாம இன்னொரு வீட்டையும் கஷ்டப்படுத்திட்டாங்க’’ என்றார், வேதனையோடு.
அவரே, ‘‘பொசசிவ்னெஸ் வேற… சந்தேகம் வேற! ரெண்டுக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். பொண்ணுங்க அதில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இல்லாத ஒண்ணை கற்பனை பண்ணிக்கிட்டு கணவனை சந்தேகப்பட்டு, அவரைப் பிரிஞ்சு இப்போ வரை தனிமையில் வாடுற பல பெண்களை எனக்கு தெரியும்’’ என்றார்.
மாமியார்களின் எதிர்பார்ப்பு என்ன?
டாக்டர், நர்ஸ், அரசியல்வாதி வரிசையில் நம் ஊர் ஜோக்குகளில் அதிக இடம்பிடிப்பவர்கள் மாமியார், மருமகள்தான். ஆனால், வெறுமனே சிரித்துவிட்டுப் போகக்கூடிய விஷயம் இல்லை, மாமியார் – மருமகள் உறவு. இந்த உறவில் எழும் விரிசல்தான் பல வீடுகளில் பிரச்னையையே உருவாக்குகிறது.
சரி, மாமியார்கள் உண்மையிலேயே ஒரு மருமகளிடம் எதிர்பார்ப்பது என்ன? புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு அவை உபயோகமான டிப்ஸ் அல்லவா?
சில மாமியார்களிடமும், மாமியாராக புரமோஷன் பெற உள்ளவர்களிடமும் பேசினோம்.
தனது நினைவுகளிலிருந்தே தொடங்கினார் விஜயலஷ்மி. திருமண வயதில் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
‘‘முப்பது வருஷம் முன்னாடி ஏழு பேர் இருந்த ஒரு கூட்டுக் குடும்பத்துல நான் நுழைந்தப்ப இருந்த படபடப்பு, விநோதமான ஒரு பய உணர்ச்சி எல்லாம் இன் னும் என் நினைவுல பசுமையா இருக்கு. அதைப் புரிஞ்சுதான் இன்னிக்கும் அவங்களை டீல் பண்றேன்’’ என்று தன் தரப்பிலிருந்து பேசிய வர், கொஞ்சம் கொஞ்சமாக மருமகளிடமிருந்து, தான் எதிர்பார்க்கிற விஷயங்கள் பற்றியும் சொன்னார்…
‘‘இந்தக் காலத்து மருமகள்கள் டீன் ஏஜ் பொண்ணுங்க கிடையாது. காலேஜ்ல படிச்சவங்க. வேலை பார்க்கிறவங்க. அங்கேல்லாம் நாலு பேரை அட்ஜஸ்ட் பண்ணி, பழகினவங்க. அதே பக்குவத்தோடதான் புகுந்த வீட்டுக்குள்ளயும் அவங்க நுழையணும்கிறது என் எதிர்பார்ப்பு மட்டுமில்ல… எல்லா மாமியார்களோட எதிர்பார்ப்பும்.
பாலம்மாள் – சோமசுந்தரி
பாலம்மாள் – சோமசுந்தரி
அபிப்ராய பேதம் வரும், போகும். அதையெல்லாம் மனசுலயே வெச்சு கணவன் வர்றவரை காத்திருந்து சொல் லாம, அப்பப்ப மாமியார்கிட்டயே தன்மையா ‘நீங்க இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கல. உங்க பொண்ணா இருந்தா இப்படிச் சொல்வீங்களா?’னு கேட்கலாம். அப்படிப்பட்ட பொண்ணை எல்லா மாமி யாருக்குமே பிடிக்கும்’’ என்றவர், இன்னொரு விஷயமும் சொன்னார்.
‘‘மகனும் மருமகளும் நம்ம கூடவே இருப்பாங்கனு சொல்ல முடியாதே… அப்படி தனியா இருக்கிற பட்சத்துல சில மருமகள்கள் ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. எனக்குத் தெரிஞ்சு மகன் வீட்டுக்கு அமெரிக்காவுக்குப் போய் தங்கிட்டு வர்ற பல அம்மாக்கள் திருப்தியா வர்றதில்ல. காரணம்… மருமக, ‘இங்க உள்ள கிச்சன்ல உங்க ளுக்கு வேலை பார்க்கத் தெரி யாது’னு சொல்லிடுவாங்களாம்.
தன்னோட மகனுக்கு தன் கையால சமைச்சுப் போடணும்கிற ஆசை எந்த அம்மாவுக்கும் இருக்கும். அவங்களோட உணர்வுகளுக்கும் மரியாதை தரணும். அவங்க வீடுங்கிற உணர்வோட அவங்க இருக்கற துக்கு அனுமதிக்கணும்…’’ என்று பொளந்து கட்டினார் விஜயலஷ்மி ராமாமிர்தம்.
பளீர் வெண்ணிறத்தில் புடவை, ரவிக்கை. நெற்றியில் துலங்கும் திருநீறு. ஃபெவிக்கால் போட்டு ஒட்டாத குறையாக இதழோரம் எப்போதும் புன்னகை. 81 வயதிலும் அசராத சுறுசுறுப்பு. இதுதான் பாலம்மாள்.
ஆறு பெண்கள், நான்கு ஆண்கள் என்று பெரிய குடும்பம்.
நான்கு மருமகள்களும், ‘‘இவங்க எங்க மாமியாரே இல்ல… எங்க அம்மா’’ என்று சொல்லும் அளவுக்கு, மருமகள்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் இந்த மாமியாரை சந்தித்தோம்.
எடுத்த எடுப்பிலேயே, ‘‘வீட்டுக்கு வர்ற மருமகள்கிட்டே எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிறது என் எண்ணம்…’’ என்றார் தடாலடியாக.
‘‘இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு வேகம் இருக்கற அளவு, விவேகம் இல்லை. எதையும் காலம் கடந்து யோசிக்கிறாங்க. அதனால கஷ்டம் அதிகமாயிடுது. இதையெல்லாம் தவிர்க்கறதுக்குதான் ‘அன்பும், அறனும் உடைத்தாயின்’னு அன்னிக்கே வள்ளுவர் அழகா சொல்லி யிருக்காரே! கல்யாணம் நிச்சயமானதுமே, அந்தப் பொண்ணு, ‘இனிமே இதுதான் நம்ம குடும்பம்னு மனசில ஆழமா நினைக்கணும்… இவுங்களோட சுற்றமும் நட்பும் நமது சொந்தம்னு நினைச்சிட்டா பிரச்னையே இல்ல’’ என்றவர்,
‘‘பொண்ணுங்கிறவ படபடனு கொட்டிடக்கூடாது. எல்லாத்தையும் மனசுல வாங்கிக்கணும். அமைதி காக்கணும். கொஞ்சம் கொஞ்சமா சிந்திச்சு, பரிவோடயும், பாசத்தோடயும் முடிவு எடுக்கணும். எங்க மருமகள்களுக்கெல்லாம் இது கைவந்த கலை…’’ என்றபடி அருகில் இருந்த தன் கடைக்குட்டி மருமகள் சோம சுந்தரியைப் பார்த்துப் புன்னகைத்தார்.
‘‘சின்னப் பொண்ணுங் களுக்கு நான் சொல்ல விரும்புற ரகசியம் ஒண்ணே ஒண்ணுதான்.. நாங்க உங்ககிட்ட எதிர்பார்க் கிறது துணிமணியோ, பணம் காசோ இல்ல. கொஞ்சமே கொஞ்சம் அன்பும் ஆதர வும்தான்… பெரியவங்களுக்கு தேவை பிரியமும் மரியாதை யும்தானேம்மா? அதைக் கொடுத்தா, நாங்க உங்க அடிமை ஆயிடுவோமே. இந்த சிம்பிள் லாஜிக் புரியாம எத்தனை குடும்பத்தில் சண்டை, சச்சரவு? அன்பைக் கொடுத்துதானே, அன்பை வாங்கணும்!’’ என்கிறார் அழகாக!
சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிற ராஜேஸ்வரி ஏகாம்பரத்துக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு திருமணமாகிவிட, மகனுக்கு இப்போது திருமண வயது.
‘‘மருமகள் எங்களுக்கு ‘மறு’மகள்தாங்க. அதிலிருந்தே நீங்க புரிஞ்சுக்கலாம்’’ என்று ஆரம்பித்தார்.
‘‘‘விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை. கெட்டுப் போனவன் விட்டுக் கொடுப்பதில்லை’ங்கிறதை நல்லாப் புரிஞ்சுகிட்டவ நான். என் மகளும் அப்படித்தான். அவளை சீமந்தம் முடிஞ்சு அழைச்சிட்டு வரும்போது, அவ மாமியார் அழுதாங்கன்னா பாத்துக் குங்க. காரணம், எல்லோரையும் அனுசரிச்சுப் போகும்படியான எங்களோட வளர்ப்பு. அதை மட்டும்தான் எங்க வீட்டு மருமகள்கிட்டயும் எதிர்பார்க்கிறேன்’’ என்றார் இயல்பாக!
கஸ்தூரி திருஞானசம்பந்தம் ஏற்கனவே மாமியார்தான். மூத்த மகன் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்க, இரண்டாவது மருமகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
‘‘சகிப்புத்தன்மையும் பொறுமையும் இருக்கிற மருமகள் போதும்ங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு வீட்டுல மாமியார் எவ்வளவோ விட்டுக் கொடுத்துப் போயும் மருமக ரொம்ப உதாசீனமா நடந்துட்டா. இப்போ, தனிக்குடித்தனமா இருக்காங்க. எப்படியோ அவங்க நல்லா இருந்தாச் சரினு பெரியவங்களும் ஒதுங்கிட்டாங்க. அப்படித் தாங்க. நல்ல மனசு இருந்தா சேர்ந்து இருக்கணும். சரிப்பட்டு வரலையா… ஒதுங்கிடணும். அதாங்க நல்லது’’ என்கிறார் கஸ்தூரி.
அன்பைக் கூட்டும் அனுபவ முத்துக்கள்…
நாத்தனார், மாமியார் என்று பல உறவு முறைகள் இருந்தாலும் கணவனுடனான அன்பும் நெருக்கமும்தானே இல்லற வெற்றியின் அடிநாதம். இப்படி ரொமான்ஸ் குறையாமல் வாழ்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற வி.ஐ.பி. தம்பதிகளின் ‘ரொமான்ஸ் ரகசியங்கள்’ அவள் விகடனில் வந்துகொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். அதிலிருந்து சில முத்துக்கள்…
விஜயலட்சுமி – நவநீதகிருஷ்ணன்
‘‘குடும்ப வாழ்க்கையில கோபம், சண்டை, பிரிவு இதெல்லாம் வாண வேடிக்கை மாதிரி. அப்பப்ப வந்தாலும் உடனே மறைஞ்சிடணும். அன்புங்கிறது அகல்விளக்கு மாதிரி. வாழும் காலம் முழுக்க எரிஞ்சுக்கிட்டே இருக்கணும்!’’
தென்கச்சி சுவாமிநாதன் – மகாலஷ்மி
‘‘எதிர்பார்ப்பு இல்லாத இடத்துல ஏமாற்றம் இல்ல. ஏமாற்றம் இல்லாத இடத்துல பிரச்னைகளும் இல்ல. இயல்பான, எளிமையான வாழ்க்கை நிறைவைத் தரும்’’
சாலமன் பாப்பையா – ஜெயபாய்
‘‘இப்பவும் எங்களுக்கே எங்களுக்கான தனிமைப் பொழுதுகள் இருக்கிறதாலதான் எங்க அந்நியோன்யம் குறையலை. மொதமொதலா பள்ளிக்கூடத்துக்குப் போற புள்ள அம்மாகிட்ட வந்து நடந்தது அம்புட்டையும் ஒப்பிக்குமே… அந்த மாதிரி ஒருத்தருக்கொருத்தர் ஒளிவில்லாம ஒப்புச்சுக்கணும்.’’
மருது – ரத்தினம்
‘‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பைக் கொட்டித் தர்ற பொண்ணை மொத்தக் குடும்பமும் தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடும். கணவன் வீட்டு ஆட்களை தன் வீட்டு மனிதர்கள் மாதிரி அவங்க நேசிக்கிறது கணவன் மனசுல பெரிய நெகிழ்வை உண்டாக்கிடும்’’
நாசர் – கமீலா
‘‘மணவாழ்க்கை சுமூகமாக போக அன்பு இருந்தா மட்டும் போதாதுங்க.. அதே அளவுக்கு கணவன் மனைவிக்குள்ள பரஸ்பர மரியாதையும் இருக்கணும். அவங்க செய்யுற ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் பாராட்டக் கத்துக்கணும்..’’
வெளிநாட்டில் வாழப்போற பொண்ணே!
உள்ளூர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்தாலே பிறந்த வீட்டைவிட்டுப் பிரிய முடியாமல், புதுமணப் பெண்கள் மாலை மாலையாக கண்ணீர் சிந்தியது ஒரு காலம். இப்போது, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் பறந்து சென்று அமெரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாடுகளில் மணவாழ்க்கை தொடங்குகிறார்கள்.
மொழியில் தொடங்கி கலாசாரம் வரை எல்லாமே புதிதாக இருக்கும் அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது? வெளிநாட்டில் வாழப் போகும் பெண்களுக்கு, தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள் சில அமெரிக்க மருமகள்கள்…
கலிபோர்னியாவாசியான மாலா மாதவன்:
‘‘நான் பிறந்து வளர்ந்தது நாமக்கல்னாலும், பட்டதாரிங்கறதால அமெரிக்கச் சூழல் அவ்வளவா அச்சுறுத் தலை. கணவருக்கு சாஃப்ட்வேர் நிறுவனத் துல வேலை. சில சமயங்கள்ல நாள் முழுக்ககூட அவர் ஆபீஸ்லயே இருக்க வேண்டிவரும். அப்பல்லாம் வீட்டுல நான் தனியாத்தான் இருப்பேன். ‘ஏதாச்சும் பிரச்னைனா என்ன செய்யணும்? எந்த நம்பர்ல யாரை கூப்பிடணும்?’ங்கற மாதிரி எல்லாத் தகவல்களையும் என் கணவர் ஏற்கனவே சொல்லித் தந்திருக்கறதால பயமில்லாம இருக்கு.
பேர்தான் அமெரிக்கா. ஆனா, இங்க திரும்பின திசையெல்லாம் இந்திய முகங்கள் தெரியும். அந்த அளவுக்கு இங்கே ஏகப்பட்ட இந்தியர்கள் இருக்காங்க. அதனால கலாசாரக் குழப்பம், மொழிப் பிரச்னை, உறவினர்கள் அருகில் இல்லாத தனிமை உணர்வு… இப்படி எந்த சங்கடமும் இல்லை. ஆனா ஒண்ணு, இங்கிலீஷ் இங்க எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு இந்தியும் முக்கியம். ஏன்னா, இந்தி பேசற ஆளுங்க இங்க குவிஞ்சிருக்காங்க. எனக்கு ஏற்கெனவே இந்தி தெரியும்ங்கறதால சீக்கிரமே இங்கே செட்டாயிட்டேன்.
இயல்பாவே எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். ஆனா, இங்க அதெல்லாம் வேலைக்கு ஆகாதுனு வந்ததுமே தெரிஞ்சு போச்சு. கணவரோட ஆபீஸ் பார்ட்டிகளுக்கும், ஃப்ரண்ட்ஸ் வீடுகளுக்கும் அடிக்கடி போக வேண்டியிருக்கும். அங்கே முன்னப்பின்ன அறிமுகமில்லாத ஆட்களோடும் கலகலனு பேசணுங்கறதால என் கூச்ச சுபாவம் ஓடியே போய், இப்போ ‘ஜாலி மாலா’வா மாறிட்டேன்!’’
சாக்ரமாண்டோவில் வசிக்கும் கவிதா சரவணன்:
‘‘இப்போ நான் வீட்டுலதான் இருக்கேன். கூடிய சீக்கிரமே வேலைக்கு போகப் போறேன். வேலைக்குப் போக கல்வித் தகுதி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கார் டிரைவிங் தெரிஞ்சிருக்கறதும் முக்கியம். அதுக்காக டிரைவிங் கத்துகிட்டிருக்கேன். அமெரிக்காவுல எடுக்கற டிரைவிங் லைசென்ஸ் அடையாள அட்டையாகவும் பயன்படும்.
நியூயார்க்ல ட்வின் டவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அப்புறம் இங்க எல்லா இடங்கள்லயும் பாதுகாப்பு முறைகள்ல ரொம்ப கெடுபிடி பண்றாங்க. இப்படிப்பட்ட நிலையில், ஏதாவது அவசரம்னா தனியே பிரயாணம் பண்ண பழகிக்கறது நல்லது. அதுக்கும் டிரைவிங் தெரிஞ்சுக்கறது அவசியம்.
கணவர் கூப்பிடறாரேனு கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி பின்னாலயே போகணும்னு அவசியமில்லை. எங்க, யாரை சந்திக்கப் போறோம்? அவங்க பழக்க வழக்கம் என்னங்கறதப் பத்தியெல்லாம் கணவர்கிட்டயே முன்னாடியே பேசி தெரிஞ்சுட்டு, மனசுக்கு திருப்தியா தெரிஞ்சா போகலாம். இல்லேன்னா விட்டுடலாம். இப்படி அனுபவ பூர்வமா சில அடிப்படை விஷயங்கள புரிஞ்சு நடந்துகிட்டா எந்த நாடானாலும் நல்லாவே வாழ்ந்துடலாம்.’’
சுபாங்கி கெலேகர் (இவரும் சாக்ரமாண்டோவில் வசிக்கிறார்):
‘‘கட்டுப்பெட்டித்தனம் ரொம்ப நாள் நம்ம கூட வராது. நாடு விட்டு நாடு போனாலும் தாலி, மெட்டி, பொட்டுனு நம்ம கலாசார அடையாளங்களத் தொடரலாம்தான். ஆனா, அமெரிக்கர்கள் அதிகமா புழங்கற நிகழ்ச்சிகள், காக்டெய்ல் பார்ட்டிகளுக்குப் போறப்ப, தற்காலிகமா இதையெல்லாம் துறக்கறதுல தப்பில்லைங்கிறது என்னோட கருத்து. நம்ம அடையாளங்கள், நம்ம கலாசாரத்தை ஞாபகப்படுத்தறதை விட்டுட்டு, நம்மை எல்லாருக்கும் காட்சிப் பொருளாக்கக் கூடாது இல்லையா?
அதேமாதிரி, ஒயின் கிளாஸை கண்டதுமே ‘ஐயோ’னு கன்னம் சிவக்க, மறுத்து ஒதுங்கறதும் சரியல்ல. ஒரு மரியாதைக்காகவாவது இது மாதிரி சடங்குகளை அனுசரிச்சுப் போனா, தனிமைப்பட்டுப் போயிடாம நாம கலந்து பழக உதவும். இதையெல்லாம் புரிஞ்சு நடந்துக்கறதால எனக்கு அமெரிக்க வாழ்க்கை இனிக்கத்தான் செய்யுது!’’
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஸ்ரீவித்யா:
‘‘வீட்டையும் பார்த்துட்டு, வேலைக்கும் போயிட்டுனு இந்த நாட்டு பிஸி வாழ்க்கை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இங்கே பணம் ஒரு பிரச்னையே இல்லை. ஆபீஸ்ல போட்டிகளுக்கு நடுவுல நீந்தி வெளிவர நடத்தற போராட்டம் இந்த நாட்டோட இன்னொரு சுவாரஸ்யம்.
ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட்லருந்து இந்தியாவுல வெச்சிருக்கற என்.ஆர்.ஐ அக்கவுண்ட் வரை எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கறப்ப இம்மாதிரியான விவரங்கள் தெரியாம முழிக்கறதைவிட முன்னேற்பாடோடு நடந்துக்கறது நல்லதாச்சே.
எப்பவும் துறுதுறுனு இருக்க துடிக்கறவங்களுக்கு மேல் நாட்டு வாழ்க்கை நிச்சயம் வரப்பிரசாதம்தான்.’’
அமெரிக்கா, சிங்கப்பூர் என்று அயல்நாடுகளில் வாழப் போன பெண்களில், கலாசார சிக்கல்களாலும் கணவர்களின் பற்றற்ற நடவடிக்கைகளாலும் கஷ்டப்பட்டு, மீண்டுவர வழி தெரியாமல் தவிப்போரும் உண்டு. அவர்களின் நிவாரணத்துக்கு என்ன வழி?
அருகிலுள்ள காவல் நிலையத்தை தயங்காமல் அவர்கள் அணுகலாம். மொழி தெரியாவிட்டாலும் கண்டிப்பாக காவல் நிலையத்தில் உதவி கிடைக்கும்.
அமெரிக்காவில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக, கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. ‘லைட் ஹவுஸ் ஃபார் விமன்’ என்ற இந்த அமைப்பைத் தொடங்கி, நடத்தி வருபவர் நளா என்ற இந்தியப் பெண்மணி. இந்து ஜெயகுமார் என்ற பெண்மணியும் இவரோடு இணைந்து செயலாற்றுகிறார்.
அமெரிக்காவில் மட்டுமில்லாமல், இந்தியா உட்பட எந்த நாட்டில் பெண்கள் (உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ) பாதிக்கப்பட்டாலும் நளா, இந்து ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
ஈ மெயில்: nallas@aol.com
வெப்சைட்: www.lighthouseforwomen.org
வெப்சைட்: www.lighthouseforwomen.org
0 கருத்துகள்:
கருத்துரையிடுக