23 பிப்., 2012

உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!



இதில் வைட்டமின் பிமற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

`கிஸ்மிஸ் பழம்என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இனி, உலர் திராட்சையின் பயன்கள்!

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

*உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

*இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

*குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

*தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.

*மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

*உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons