20 ஜூன், 2011

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!


கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!

பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள் 
பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய 
அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். 
ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன் 
கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என 
ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான 
விடைகளைப் பார்ப்போம். 
*எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?* 
     கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், 
பொறியியல், எம்.பி.., எம்.சி.., பி.காம்., பி.எஸ்சி.,  போன்ற படிப்பு களுக்கு 
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள 
அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் 
படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் 
இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க 
மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் 
வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் 
கல்விக் கடன் உண்டு. 
*எவ்வளவு கடன் கிடைக்கும்?* 
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 
லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க 
வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க 
வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என 
அனைத்துக்கும் பொருந்தும். 
*எப்படி வாங்குவது?* 
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் 
பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே 
ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, 
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். 
* 
எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?* 
கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, 
புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், 
கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். 
*எப்படி கடன் வாங்குவது?* 
கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், 
சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் 
குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க 
வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், 
கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் 
அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் 
கொள்ளப்படும். 
*எப்போது கடனை திரும்பக் கட்டுவது?* 
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த 
ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட 
வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, 
வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் 
கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் 
படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. 
வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. 
ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி 
விகிதம்தான். 
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி 
குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை 
அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை 
காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி 
கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம். 
*தேவையான ஆவணங்கள்!* 
கல்லூரி போனோஃபைட் சான்றிதழ். 
கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள். 
பெற்றோரின் வருமானச் சான்றிதழ். 
இருப்பிடச் சான்றிதழ். 
பள்ளி மாற்று சான்றிதழ். 
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் 
கடிதம், சேர்க்கைக் கடிதம்  உள்ளிட்டவை தேவைப்படும். 
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க 
இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் 
கொடுக்க வேண்டும். 
* 
கவனத்தில் கொள்ள வேண்டியவை!* 
எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது. 
ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் 
தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் 
எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும். 
ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் 
கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் 
செலுத்த வேண்டிவரும். 
*வரிச் சலுகை!* 
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே 
வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் 
படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. 
கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே 
வருமான வரி விலக்கு கிடைக்கும். 
* 
கடன் தர தயக்கம்* 
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் 
மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் 
எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 
சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே 
அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை 
பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு 
எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் 
நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான். 
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் 
அதிகரிக்கும்என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் 
காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் 
கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 
லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. 
மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன. 
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை 
மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. 
படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் 
பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை 
வங்கியின் மேலாளர் ஒருவர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons