29 மே, 2011

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!


பிறகு” “பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம்.

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமேபிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்

பிறகு படித்துக் கொள்ளலாம்அப்புறம் வேலை பார்க்கலாம்கடைசியாகச் செய்து விடலாம்என்று பேசுகிறவர்கள்நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.

பிறகு” “பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள். நிறைய நேரம்நிறைய வாய்ப்புகள்என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள்.

கொஞ்சம்தான் நேரம்கொஞ்சம்தான் வாய்ப்புகொஞ்சம்தான் பணம்கொஞ்சம்தான் ஆயுள்என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளைநாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றேஇப்போதேஇந்த கணமே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமைநாள் நன்றாக இல்லைதிங்கட்கிழமை சேருவோம்என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். --

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons