17 நவ., 2010

ஸலாம் கூறுவதன் சிறப்பு

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

புறக்கணிக்கப்பட்ட சலாம்!

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -

சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். என்றார். நபி (ஸல்) அவர்கள்

‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -

உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)

வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -

நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்? பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.

அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons