12 நவ., 2010

FASTING - GOOD FOR HEALTH

FASTING - GOOD FOR HEALTH
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் வென்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.
இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இத்ன மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்
காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள்"நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு" என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறை இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அரவது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும்.இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும் ஐஸ்சும் சேர்க்கக் கூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்து. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு வனப்பு அதிகமாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.
நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் விடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தலைவலி :
கை கட்டை நகத்திற்கு கீழ் பகுதி முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.
மூச்சுத் திணறல் :
இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் வைத்தால் மூச்சுத் திணறல் சரியாகும்.
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்காக முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons