15 நவ., 2010

திருநெல்வேலி அல்வாவும், மல்லிகைப்பூவும்


சாயங்காலத்து வெயில் மென்மையாக இருக்கும். ஒரு அலாதியான் அமைதியைத் தந்து கொண்டிருப்பது போல தோற்றம் அளிக்கும். எல்லோரும் வீடு திரும்புகிற காட்சி. பறவைகள் கூட, மனிதர்களைபோல கூட்டமாயும், தனித்தனியாகவும் தங்கள் உறைவிடங்களுக்குத் திரும்புவதைக் காணலாம். மகிழ்ச்சியோடு பலர் வீடு திரும்புகிறார்கள். பலர் திருப்தியடையாமல் கவலையோடு இல்லம் திரும்புகிறார்கள். மாளிகையில் வசித்தாலும், பல சுகங்கள் கைக்குள் அடங்கியிருந்தாலும், மனதில்தான் ஒருவன் அல்லது ஒருத்தி உண்மையாய் வாழும் மாளிகை அடங்கியிருக்கிறது. கோபுரத்தில் இருந்தாலும், மனம் அமைதியின்றித் தவித்தால், எதையும் அனுபவிக்க முடியாது. மனம் தொந்தரவிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல துணைவியிடம் இன்புற்றிருத்தல் ஒரு உன்னத வாழ்ககை அனுபவம்.

ராம்குமாரும், ராதிகாவும் திருமணமாகி ஆறு மாதம் கழிந்துவிட்டது. எல்லாப் பொருத்தமும் பொருந்திவிட்ட ஜோடி எனலாம். காண்பவர்கள் அனைவரும் இவர்கள் ஜோடி பொருத்ததைக் குறித்து வியக்காமல் இல்லை. ராம்குமார் தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பதவிவகிக்கிறார். நல்ல கல்வித் தகுதி, நல்லத் திறமை. இதனால், இளம் வயதிலேயே, நல்ல உத்தியோக உயர்வைப் பெற்று, வட இந்தியாவில் கான்பூர் நகரத்தில் உள்ள கிளையில் பொறுப்பேற்குமாறு சமீபத்தில் வங்கி மேலிடம் அனுப்பி வைத்தது.

ராம்குமார் தன்னுடைய வாழ்க்கையில் வேகமாக முன்னேறியிருக்கிறார். நல்ல மனைவி. ராதிகாவும் நல்ல படித்தவள்தான். ஆனால் ராம்குமார் அவளை வேலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ராம்குமார் மனைவியை கான்பூருக்கு அழைத்துவந்து குடியேறினார்.

முதல் ஒரு மாதம் அவர்கள் அனுவத்த தனிமைகூடிய நெருக்கத்திற்கு நேர்மாறாக இப்பொது கடந்த சில வாரங்களாக அவர்களுக்குள் ஒரு தளர்வு ஏற்பட்டுவிட்டது. காரணம் ராம்குமார் அலுவலகம் முடிந்து வீடு வரும்போது சலிப்புடனும், சோர்வுடனும் வருவது வாடிக்கையாகிவிட்டது. ராதிகாவிடம் மனம்விட்டு பேசுவது குறைந்து ஏதோ கடமைக்கு வீட்டுக்கு வந்து செல்வது போலாகிவிட்டது.

"ஏங்க, முன்பு மாதிரி கலகலப்பா பேசுறது இல்லை…எப்போதும் ஆழ்ந்த சிந்தனைல இருக்கிறாப்ல தெரியுது."

"நாம நல்லாத்தானே இருக்கோம். என்ன குறை?"

"குறைவு ஒன்றுமில்லை. நல்லாத்தான் என்னை வச்சிருக்கிங்க. ஆனால், நாம் இதுவரை அனுவத்துவந்த பரஸ்பர நிறைவில் குறைவுபடுகிறது, உங்களுக்குப் புரியாமலில்லை..."

"இல்லை. ராதிகா. எனக்கு அலுவலகத்தில் கொஞசம் வேலை அதிகமா இருக்கு. அதுதான் வீடு வந்து சேருமுன் அலுப்புத் தட்டுறது மாதிரி ஆகிடுது. இன்னும் அலுவலகத்தில் வடநாட்டவர்தான் அதிகம். தென்னாட்டைச் சேர்ந்தவன் என்பதால் எனக்குப் பலவிதத்திலும் வேதனைத் தருகிறார்கள். போலி ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு வங்கிக் கடன், மேலதிகாரியின் சிபாரிசோடு என் அனுமதிக்கு வருகிறார்கள். மிகவும் கவனமாகவும், கடமையுணர்வுடன் எப்போதும் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன்."

"எதுவாயிருந்தாலும், அலுவலக கவலைகளை வீட்டுக்கு சுமந்துகிட்டு வரவேண்டாம். நீங்க கவலைப்படுறதுனால என்ன செய்ய முடியும், எதைக் கூட்டமுடியும், எதைக் குறைக்க முடியும்? எங்கப்பா போலிஸ் அதிகாரி. எவ்வளவோ பிரச்ச்னைகளைத் தினமும் சந்திப்பார். ஆனா, வீட்டுக்கு வரும்போது எந்தப் பாதிப்பும் இல்லாம சகஜமா நடந்துக்குவார். எல்லாருக்கும் நேரம் தந்து பேசி, சந்தோசப்படுத்துவார். எப்படிப்பா இப்படி முடியுது என்று கேட்டால், 'எல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான். ஏன்னா நான் மனசாட்சிய சுத்தமா வச்சிருக்கேன். நேர்மை தவறாமல் என் கடமையைச் செய்றேன்.' என்பார். இந்தாபாருங்க, நீங்க நேர்மையோடு வேலைச் செய்யும் போது ஏன் கலங்கணும்? நீங்கத்தான் உறுதியா இருக்கணும்."

ராதிகா, சூடாக காபி கொண்டு வந்து கொடுத்தாள். என்றாலும் ராம்குமார் இறுக்கமாகவே இருந்தான். வாடிக்கையாக இரண்டு பேரும் சேர்ந்து இருக்கையில் அமர்ந்து ரசிக்கும் டிவி சீரியலையும் அவனால் மனமொன்றி பார்க்க இயலவில்லை.

ராம்குமார் வழக்கமாக பக்கத்து வீட்டு சிறுவன் ராஜாவை சாயங்கால வேளையில் சாலையோரம் அழைத்துச் சென்று நடந்துவருவான். எப்போதெல்லாம் சிறுவன் ஒடும் பேருந்தைக் காண்பானோ அப்போதெல்லாம், தன் கையை உயர்த்தி ஆனந்தமாக சத்தமிட்டு, "அங்கிள், அங்கிள் 
தெர் இஸ் ய நைஸ் பஸ் கோயிங்." என்று மழலையில் அழகாகச் சொல்லிக் குதிப்பான். ராம்குமாரின் கைகளைச் செல்லமாக வருடி பிடித்துக்கொள்வான். இன்று மாலை அந்தச் சிறுவன் வரவில்லை. ராம்குமார், முதலில் ராதிகாவை அழைத்துச் செல்ல நினைத்தான். ஆனால் மனசு சரியில்லை; போகும்போது அவளிடம் இயல்பாக பேசயியலாது என்று நினைத்துத் தனியாக சாலையோரம் நடக்க ஆரம்பித்தான். 

சாலையில் ஊர்திகள் பரப்பரப்பாகச் சென்றுகொண்டிருந்தன. நடையாய் ஒரு பக்கமாக சென்றுகொண்டிருந்தாலும், அவனுடைய சிந்தனையோட்டம் ஒன்றையொன்றை யோசித்தப்படி, கலங்கியபடி இருந்தது. அவ்வாறு நடக்கையில் ஒரு பஸ் அவனை வேகமாகக் கடந்து சென்றது. ராம்குமார் அவனையாமல், அந்த பஸ்சை நோக்கி கையை உயர்த்தினான். இது ஒரு அனிச்சை செயல்தான்? சிறுவன் ராஜாதான் வழக்கமாக இவ்வாறு செய்வான். இன்று அவனில்லை..அனால் அந்த சிறுவனைப் போன்றே இவன்...மட்டுமன்றி அந்த பஸ் கண்ணைவிட்டு மறையும் வரையிலும், ராம்குமார் தன்னை மறந்து அதிலே லயித்துவிட்டான்.

ஒரு கணம் இந்த உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டவனாய், கண்ணில் காணும் பொருட்களை சுவாரசியமாய் ரசித்து ஆனந்திப்பது போல ஒரு உச்ச உணர்வை அவனால் அனுபவிக்க முடிந்தது. குழந்தைகள் அல்லது கவலைகளைப் புறம் தள்ளி வாழ பழகிக்கொண்டவர்கள் எவ்வளவு பேறுபெற்றவர்கள்! இப்படிப்பட்ட்வர்களால்தான் மனமொன்றி வாழ்க்கையை, இயற்கையை ரசிக்க முடியும். மற்றவர்களிடம் முழுமையாய் அன்பு காட்டமுடிய்ம். ஏன் மற்றவர்களின் அன்பையும் ருசிக்க முடியும். இந்த ஒருகணம் விடுபட்ட நிலையில் அனுபவித்த மகிழ்ச்சி எங்கிருந்த்து வந்தது? கவலையும், களிப்பும் வெவ்வேறு இடத்திலிருது பிறக்கவில்லை. எல்லாம் இந்த ஒரே மனத்தில்தான் உறங்கிக்கிடக்கிறது.

"ராதிகா சொல்வதுபோல, நான் நேர்மையாகத்தான் நடந்து வருகிறேன். அவள் ஆலோசனைத் தந்தாளே; வரும் சோதனைகளை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு, வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கவேண்டியதுதான். எல்லாவற்றையும் நம் தலையில் சுமந்துகொண்டால், நமக்கும் நிம்மதியில்லை, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சந்தோசம் தர முடியவில்லை." இவ்வாறு ராம்குமார் யோசித்தபடி, கடந்து செல்லும் ஒவ்வொரு பேருந்தையும், கார்களையும், மிதிவண்டிகளயும், பாதசாரிகள் ஒவ்வாருவரையும் புதுமையாகப் பார்த்தான். எல்லாவற்றிலும் ஒரு அழகு, ஒரு நிறைவைக் கண்டான். சாலையோரத்து மரங்கள், அந்தியில் அடையும் பறவைகள் அனைத்தும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

மேலே உற்று நோக்கினான். மேகங்கள் தடைசெய்தபோதும், தளராமல் வெளிச்சம் தந்து கடந்து செல்லும் நிலாவின் அழகே தனிதான். இயற்கை அனுமதித்த எதிலும் தடையிருக்கவில்லை. கவலை ஏன் தடையாக இருக்கவேண்டும்? சாலையில் உள்ள பரபரப்பையும் பொருட்படுத்தாது, அருகில் வசிக்கும் குடிசைவாசிகள் எவ்வளவு மகிழ்ச்சியோடு அளவளாவுகிறார்கள். அவர்களுக்கு கவலையிருக்கவில்லையா? 

வாழ்கையில் புதிய பாடம் புரிந்துவிட்ட மகிழ்ச்சியில், ராம்குமார் இதயம் பூரித்தது. நேரம் ஆகிவிட்டது. ராதிகா காத்திருப்பாள். எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது?

வழியில் மல்லிகைப்பூ விற்கும் பெண்ணிடம் மல்லிகைச்சரத்தையும், கான்பூரில் தமிழர் வாழும் பகுதியில் பிரபலமான திருநெல்வேலி கடைக்காரிடம் புதிதாக செய்த அல்வாவையும் வாங்கிக்கொண்டு, ராதிகாவை நினைத்தபடி, ராம்குமார் வேகமாக வீட்டுக்கு நடந்தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons